தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழர் முகாமில் வசித்த சிறுமியொருவரை கடத்திச் சென்று நண்பர் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வல்லறவிற்குள்ளாக்கிய, பிறிதொரு முகாமில் வசிக்கும் இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்குப்பம், கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த முகாமில் வசித்து வரும் பெண்மணி, கடந்த மார்ச் 4 ஆம் திகதி விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரில், “எனக்கு 11 ஆம் வகுப்பு பயின்று வரும் 17 வயது மகள் இருக்கிறார். இவர் வீட்டில் இருந்த நிலையில் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவரை கண்டறிந்து தரவேண்டும்” என புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது, சிறுமி திண்டிவனம் அருகே இருக்கும் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தகவல் உறுதியாகவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுமியை மீட்டனர். சிறுமியிடம் நடந்த விசாரணையில், கீழ்புத்துப்பட்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசித்து வரும் தினேஸ்வரன் என்ற வாலிபர் சிறுமியை கடத்தியது அம்பலமானது. அவரது பெற்றோர் மன்னாரிலிருந்து அகதியாக சென்றதாக கூறப்படுகிறது.
சிறுமியை முகாமில் இருந்து கடத்தி சென்ற தினேஸ்வரன், திண்டிவனத்தில் உள்ள நண்பரின் வீட்டில் அடைத்துவைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, தினேஸ்வரனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.