விவசாயத்துக்கும், கிராமத்துக்காகவும் நேரம் ஒதுக்காதது குற்ற உணர்வாக இருக்கிறது என்று நடிகர் சூர்யா தெரிவித்தார்.
நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கும் இந்த ஆண்டுக்கான விழா சென்னை தியாகராய நகரில் நடந்தது. இதில் பள்ளபட்டி சரோஜா(சிறந்த பெண் விவசாயி), வாசுதேவநல்லூர் ‘சங்கனாப்பேரி களஞ்சியம்’ பெண் விவசாயிகள் சங்கம்(பெண் விவசாயிகள் கூட்டமைப்பு), ஒட்டன்சத்திரம் பரமேஸ்வரன் (மரபு விதைகள் சேகரிப்பு, பரவலாக்கம்), காவல் கிணறு நம்அனுமன் நதி அமைப்பு (நீர்நிலைகள் மீட்பு), கோத்தகிரி நம் சந்தை அமைப்பு (சிறந்த வேளாண் கூட்டுறவு அமைப்பு), மயிலம் சிருஷ்டி ஃபவுண்டேஷன் (வேளாண் சிறப்புவிருது) ஆகியோருக்கு விருதுகளும், தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டன.
நடிகர் சூர்யா பேசியபோது, ‘‘விவசாயத்துக்கும், கிராமத்துக்காகவும் நேரம் ஒதுக்காதது, குற்றஉணர்வாக இருக்கிறது. நம் குழந்தைகளுக்கு விவசாயத்தை அறிமுகம் செய்துவைக்க வேண்டும்.அவர்கள் இதை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வார்கள்’’ என்றார்
‘‘படித்த மாணவர்கள் விவசாயத்துக்கு வந்து அதை நவீன முறையில் உருவாக்க வேண்டும்’’ என்றுநடிகர் சிவக்குமார் வலியுறுத்தினார். ‘‘இயற்கையை காப்பாற்றுவதே நம் அடுத்தகட்ட நகர்வு. விவசாயத்துக்கு உபயோகமான கருவிகளை தமிழக பொறியாளர்கள் உருவாக்க வேண்டும்’’என்று நடிகர் கார்த்தி கூறினார்.
விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், மருத்துவர் கு.சிவராமன், சூழலியலாளர்கள் பாமயன், அனந்து ஆகியோரும் கலந்துகொண்டு, விருதுகளை வழங்கிப் பேசினர்.