பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள ‘அரபிக்குத்து’ பாடல் வரிகளுக்காக சிவகார்த்திகேயனைப் பாராட்டியுள்ளார் விஜய்.
நெல்சன் இயக்கத்தில் விஜய், செல்வராகவன், பூஜா ஹெக்டே, யோகி பாபு, கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் ஏப்ரல் 14ஆம் திகதி வெளியாகவுள்ளது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
பீஸ்ட் படத்திலிருந்து ‘அரபிக்குத்து’ என்ற பாடல் வெளியிடப்பட்டது. தற்போது இணையத்தில் வைரலாகி வரும் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருவரது நடன அசைவுகளை முன்வைத்து பலரும் தங்களுடைய நடனத்தை வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார்கள்.
மேலும், யூடியூபில் குறைந்த நாட்களில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த பாடல் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளது ‘அரபிக்குத்து’. இந்தப் பாடலின் வரிகளை சிவகார்த்திகேயன் எழுத, அனிருத் – ஜோனிடா காந்தி இருவரும் இணைந்து பாடியிருக்கிறார்கள். அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
‘அரபிக்குத்து’ பாடல் வரிகளுக்கு விஜய் தன்னைப் பாராட்டியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். நேற்று விருது வழங்கும் விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன். அதில் “அரபிக்குத்து பாடலுக்கு விஜய் சார் என்ன சொன்னார்” என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு சிவகார்த்திகேயன் கூறியது:
”அரபிக்குத்து’ பாடல் ரொம்ப முன்னாடியே படமாக்கி முடித்துவிட்டார்கள். அப்போது விஜய் சார் என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியாது. எனக்கு போன் எதுவும் வரவில்லை. இவன் என்ன எழுதியிருக்கான் என்றே தெரியவில்லையே என்று நினைத்திருக்கலாம். சமீபத்தில் தான் ப்ரோமோ வீடியோ ஷுட் செய்தோம். அப்போது தான் விஜய் சார் தொலைபேசியில் “சூப்பர் பா. எழுதிக் கொடுத்ததிற்கு ரொம்ப தேங்க்ஸ் பா. அரபிக் எல்லாம் பயங்கரமா எழுதுறியே” என்றார்.
உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லையே சார். அனிருத் பாதி பாடிவிடுவார், நாம் சும்மா விட்ட இடத்தை நிரப்ப வேண்டியது தான் என்று கூறினேன். அவருக்கு ‘அரபிக்குத்து’ பாடல் ரொம்பவே பிடித்துள்ளது. முதல் தடவைக் கேட்ட உடனேயே இது பெரிய ஹிட் என்று அனிருத்திடம் தெரிவித்துள்ளார் விஜய் சார்” என்று சிவகார்த்திகேயன் கூறினார்.