நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு அமைச்சரவை அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு பொதுவாக இரண்டு மெய்க்காவலர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். இதன்படி அண்மையில் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்படவுள்ளது.
இதேவேளை, அமைச்சரவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் அண்மையில் சந்தித்ததாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதேவேளை, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளின் பங்குபற்றுதலுடன் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், பிரதமர் தலைமையில் நேற்று நடைபெற்ற நாரம்மல பிரதேச சபைக் கட்டிடத்தை திறந்து வைக்கும் வைபவத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா மகாஜன கட்சியின் பொதுச் செயலாளர் அசங்க நவரத்ன மற்றும் பிரேம்நாத் சி தொலவத்த ஆகிய இரு பாராளுமன்ற உறுப்பினர்களே இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.