அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று கூடி எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் நேற்று அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர். அரசியலமைப்பின் ஊடாக அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில எரிசக்தி அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கைத்தொழில் அமைச்சராகவும் இதற்கு முன்னர் பதவி வகித்தார்.
இதற்கு முன்னர் மின்சக்தி அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் காமினி லொக்குகே புதிய எரிசக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதேவேளை புதிய கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி.திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியை முன்னர் விமல் வீரவன்ச வகித்து வந்தார்.
நேற்றிரவு எரிசக்தி அமைச்சில் இருந்த சில தனிப்பட்ட பொருட்களை எடுப்பதற்காக தனது அலுவலகத்திற்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
நிச்சயமற்ற அமைச்சுப் பதவிக்காக தனது சுயமரியாதையை தியாகம் செய்ய தயாராக இல்லை என முன்னாள் அமைச்சர் கம்மன்பில தெரிவித்துள்ளார்.
உண்மையை மௌனிக்க அரசாங்கம் எடுக்கும் கோழைத்தனமான முடிவுகளை தான் ஏற்றுக் கொள்வதாக முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு தெரிவித்த அனைத்து அறிக்கைகளும் உண்மை என்று உறுதியளித்த அவர், அரசாங்க அதிகாரிகள் பொருத்தமாக இருந்தால் தொப்பி அணிவார்கள் என்றும் கூறினார்.
தமது அமைச்சுப் பதவியைப் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக தகவல்களை தணிக்கை செய்யவில்லை, மாறாக உண்மையை வெளிப்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் கூறினார்.
அவர் முன்வைத்த திட்டத்தை அரசாங்கம் பின்பற்றினால் பொருளாதார நெருக்கடியை தவிர்க்க முடியும் என்றார்.
எதிர்க்கட்சியில் இணைவதற்கான எதிர்பார்ப்பு குறித்து வினவியபோது, அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 அரசியல் கட்சிகளின் இன்றைய கூட்டத்தின் பின்னர் தீர்மானங்கள் எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.




