26.5 C
Jaffna
January 24, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

யுத்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றிய ஆதாரங்களை சேகரிப்பது வெறுப்பை வளர்த்து, சமூகங்களை துருவப்படுத்திவிடும்: ஐ.நாவிற்கு அறிக்கை சமர்ப்பித்தது இலங்கை!

இலங்கையில் நடந்ததாக குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிராக குற்றங்கள் குறித்து ஆதாரம் சேகரிக்கும் பொறிமுறையின் முன்முயற்சிகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரங்கில் ஒற்றுமையின்மையை உருவாக்குகின்றன. இது நல்லிணக்க முயற்சிகளுக்கு தடைகளை உருவாக்கி, கடந்தகால காயங்களை மீண்டும் திறப்பதன் மூலம் வெறுப்பை வளத்து, சமூகங்களை துருவப்படுத்துகின்றது என இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வில் இலங்கை சார்பில் அவர் சமர்ப்பித்த உரையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு-

கௌரவ தலைவர் அவர்களே,

மனித உரிமைகளை ஊக்குவித்து, பாதுகாப்பதனை உணர்ந்து கொள்வதற்கான பலதரப்புக் கட்டமைப்பில் இலங்கை ஒரு செயலூக்கமான பங்கேற்பாளராக உள்ளது.

எமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள அடிப்படை உரிமைகள், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எமது அரசாங்கத்தின் அமைப்புக்களின் மூலம் படிப்படியாக முன்னேறி, எமது சுதந்திரமான நீதித்துறையின் மூலம் செயற்படுத்தப்படுகின்றது. பயங்கரவாதத்திலிருந்து பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், நாடு முழுவதும் சமாதானம், பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுத்துள்ளோம். எமது ஜனநாயக மரபுகள் மற்றும் சுயாதீன நிறுவனங்கள் உலகளாவிய வயது வந்தோருக்கான வாக்குரிமையின் மூலம் சீரான இடைவெளியில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதி செய்கின்றன. மோதலுக்குப் பிந்தைய மீட்பு மற்றும் குணமடைதலில் நாம் பெற்ற கணிசமான முன்னேற்றத்தை மேலும் முன்னேற்றுவோம். இதற்காக நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் சமூக நீதிக்கான உள்நாட்டு நிறுவனங்களை அமைத்துள்ளோம்.

இந்த சபையின் மூலம், பரஸ்பரம் நன்மை பயக்கும் 3 உலகளாவிய காலாந்தர மீளாய்வுகளை நாங்கள் நிறைவு செய்து, ஒப்பந்த அமைப்புக்களுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, விஷேட நடைமுறைகளுக்கான ஆணைகளை வைத்திருப்பவர்களை வரவேற்று, உள்நாட்டு மற்றும் சர்வதேச உரையாசிரியர்களுடன் வெளிப்படையான மற்றும் திறந்த கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளோம். மனித உரிமைகள் தொடர்பில் ஐ.நா. விடம் உள்ள கணிசமான நிபுணத்துவம் மற்றும் அதன் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் திறன் அபிவிருத்தித் திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் நாங்கள் பயனடைந்துள்ளோம். நல்லிணக்கம் மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கான எமது உள்நாட்டு செயன்முறைகளுக்கு நாட்டிற்கான ஐ.நா. குழுவின் மூலமாக தொடர்ந்தும் நல்கப்படுகின்ற ஆதரவை நாங்கள் மதிக்கின்றோம்.

இந்தக் கூட்டுறவு ஊடாடலினூடாக, எமது உள்நாட்டுக் கட்டமைப்பு மற்றும் சர்வதேசக் கடப்பாடுகளுக்கு அமைய, இன மற்றும் மத அடையாளம் மற்றும் அரசியல் சார்பு எதுவுமின்றி, எமது பிரஜைகள் அனைவரினதும் மனித உரிமைகள் மற்றும் சமூக நீதியை மேம்படுத்தி, பாதுகாப்பதை நாங்கள் தொடர்ந்தும் உறுதிசெய்கின்றோம்.

கௌரவ தலைவர் அவர்களே,

கோவிட்-19 தொற்றுநோயால் தோற்றுவிக்கப்பட்ட பொருளாதாரப் பின்னடைவுகள் நிலவுகின்ற போதிலும், அபிவிருத்திக்கான எமது மக்களின் உரிமையை நாங்கள் தொடர்ந்தும் உறுதி செய்து வருகின்றோம். சமீபத்திய நிலையான அபிவிருத்தி இலக்கு அறிக்கைக்கு அமைய, இலங்கை தனது உலகளாவிய தரவரிசையை 7 நிலைகளால் மேம்படுத்தியுள்ளது. தமது விரிவான அடிமட்டத்திலான தொடர்பு மற்றும் நிபுணத்துவத்தின் மூலம் எமது சிவில் சமூகப் பங்காளிகள் அளித்த பங்களிப்பை நாங்கள் பாராட்டுகின்றோம்.

சர்வதேச சமூகத்தின் அபிவிருத்தியடைந்து வரும் உறுப்பு நாடாக, நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கான எமது முயற்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற தொற்றுநோய் மற்றும் ஐரோப்பாவில் நிலவுகின்ற மோதல் போன்ற நெருக்கடி மிகுந்த சூழ்சிலைகளினால் மேலும் ஏற்படவிருக்கின்ற பாதகமான பொருளாதார விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றோம்.

கௌரவ தலைவர் அவர்களே,

சபையின் பணிகளை மீளாய்வு செய்யும் காலகட்டத்தில் நாம் இன்று இருக்கின்றோம். அதன் முன்னோடி ஆணைக்குழுவின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த நம்பகத்தன்மை இடைவெளியை சமாளிப்பதில் சபை வெற்றி பெற்றுள்ளதா என்பதை நாங்கள் பிரதிபலிக்கின்றோம்.

மனித உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பல்தரப்புக் கட்டமைப்பு கடந்த தசாப்தங்களில் படிப்படியாக உருவாக்கப்பட்டது. மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவை உறுப்பு நாடுகளின் இறையாண்மை சமத்துவத்தின் அடிப்படையில் பாரபட்சமற்ற தன்மை, புறநிலை மற்றும் தேர்ந்தெடுக்கப்படாத கொள்கைகளால் வழிநடத்தப்பட வேண்டும் என்ற புனிதமானதாக நாம் கருதும் முக்கிய கொள்கைகளில் ஒருமித்த கருத்து உருவாக்கப்பட்டது. சபையின் பணி முறைமைகள் வெளிப்படையானதாகவும், நியாயமானதாகவும், பாரபட்சமற்றதாகவும் இருக்க வேண்டும் என்றும், உண்மையான உரையாடலை செயற்படுத்த வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தீர்மானம் 60/251 மற்றும் மனித உரிமைகள் சபையின் 5/1 மற்றும் 5/2 ஆகிய தீர்மானங்களின் மூலம் தீர்மானிக்கப்பட்டன.

சம்மந்தப்பட்ட நாடான இலங்கையின் அனுமதியின்றி சமர்ப்பிக்கப்பட்ட 46/1 தீர்மானத்தின் மீது மார்ச் 2021 இல் சபை வாக்களித்திருந்தது. இந்த விடயத்தைப் பரிசீலிப்பதானது இந்த மன்றத்தை துருவப்படுத்தி அரசியல் மயமாக்கியது. ஐ.நா பொதுச் சபை முதலில் இந்த சபைக்கு வழங்கிய ஆணையில் இருந்து விலகி, பல நாடுகளால் கடுமையாக எதிர்க்கப்பட்ட ஒரு நடவடிக்கையான ஆதாரம் சேகரிக்கும் பொறிமுறையை இந்தத் தீர்மானத்தின் செயற்பாட்டுப் பந்தி 6 குறித்து நிற்கின்றது. இத்தகைய முன்முயற்சிகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரங்கில் ஒற்றுமையின்மையை உருவாக்குகின்றன. இது நல்லிணக்க முயற்சிகளுக்கு தடைகளை உருவாக்கி, கடந்தகால காயங்களை மீண்டும் திறப்பதன் மூலம் வெறுப்பை வளத்து, சமூகங்களை துருவப்படுத்துகின்றது.

கௌரவ தலைவர் அவர்களே,

மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் அரசாங்கங்களுக்கு உதவுவதற்கான விரிவான பயனுள்ள பணி முறைகளை உண்மையில் உறுப்பு நாடுகள் இந்த சபைக்கும், அதன் செயலகத்திற்கும் கட்டாயமாக்கியுள்ளன. எமது மக்கள் பாதுகாப்பான, நீண்ட மற்றும் கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதை உறுதிசெய்வதற்கு உதவிய, சபையின் உற்பத்திகரமான மற்றும் நன்மை பயக்கும் பணியின் அம்சங்களில் இலங்கை தீவிரமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் பங்கேற்றுள்ளது. தண்டனைக்குரிய, அரசியல்மயமாக்கப்பட்ட, பிளவுபடுத்தும், உதவாத மற்றும் புறம்பான காரணங்களால் தொடங்கப்பட்ட விடயங்களை நாங்கள் நிராகரிக்கின்றோம்.

கௌரவ தலைவர் அவர்களே,

உலகில் ஏனைய இடங்களைப் போலவே, பயங்கரவாதத்தைக் கையாளும் போது மனித உரிமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே ஒரு நியாயமான சமநிலையை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம். பயங்கரவாதத் தடைச் சட்டமானது விசாரணைக்காக தடுத்து வைக்கப்படுதல் மற்றும் விசாரணை ஆகியவற்றுக்கு உட்பட்ட நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும், கருத்துச் சுதந்திரம் போன்ற ஜனநாயக சுதந்திரங்களைக் கட்டுப்படுத்தக் கூடாது என்றும் இலங்கை உறுதியாக நம்புகின்றது. இந்த நோக்கங்களைக் கருத்திற்கொண்டு, பயங்கரவாதத் தடைச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு 43 வருடங்களின் பின்னர், அதனைத் திருத்துவதற்கான ஆரம்ப கட்டமாக, இலங்கைப் பாராளுமன்றத்தில் நான் அண்மையில் ஒரு சட்டமூலத்தை முன்வைத்தேன்.

புறநிலை மற்றும் பற்றின்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அவசியமான விளைவுகளைக் கொண்ட தன்னார்வ நிதியைப் பயன்படுத்துவது தொடர்பில் நாங்கள் ஆட்சேபனையை முன்வைக்கின்றோம். இந்தப் பின்னணியில், 46/1 தீர்மானத்தின் ஓ.பி. 6 இன் கீழ் நிறுவப்பட்ட சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையானது இலங்கை மக்களுக்கு உதவாது, இலங்கை சமூகத்தை துருவமயமாக்கி, சவாலான நேரத்தில் பொருளாதார அபிவிருத்தி, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மோசமாகப் பாதிக்கும் என இலங்கை மீண்டும் தனது கருத்தை வலியுறுத்துகின்றது. உயர்ஸ்தானிகர் அலுவலகம் உட்பட பலதரப்பு அமைப்பு முழுவதும் கடுமையான நிதிப் பற்றாக்குறை நிலவுகின்ற தற்போதைய காலகட்டத்தில், உறுப்பு நாடுகளின் வளங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு இது ஒரு பயனற்ற விடயம் ஆகும்.

கௌரவ தலைவர் அவர்களே,

இலங்கை தொடர்பான ஊடாடும் உரையாடலுக்காக மார்ச் 04ஆந் திகதி இந்த சபை ஒன்றுகூடவுள்ளது. இலங்கை குறித்த எழுத்துபூர்வமான புதிய தகவல்கள் குறித்த சில எண்ணக்கருத்துக்களை அதன்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ் கட்சிகளிற்கிடையிலான சந்திப்பு 27ஆம் திகதிக்கு தள்ளிவைப்பு!

Pagetamil

தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளும், வெட்டுப்புள்ளியும் வெளியீடு!

Pagetamil

அட்டகாசத்தில் ஈடுபட்ட அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

அனுரவின் சீனப்பயணம்: 10 பில்லியன் டொலர் மதிப்பு முதலீடுகள் இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு!

Pagetamil

Leave a Comment