உள்ளூர் இழுவைப் படகுகள் தொடர்பான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளும் வரையினில் நாரா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இழுவைமடி வலைகளைப் பயன்படுத்த முடியும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கொழும்பு புகையிரத நிலையம் முன்பாக நேற்று (28) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டள்ளது
இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்,
“கடந்த ஆட்சியில் இழுவைமடி வலை தடைச் சட்டம் கொண்டு வரப்படடிருந்தது. எனினும் கடற்றொழிலாளர்களின் எதிர்ப்புக் காரணமாக நாரா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, இழுவைமடி வலைத் தொழிலை முற்றாக தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், எமது கடல் வளத்தை பாதிக்காத வகையில் இழுவைமடி வலையைப் பயன்படுத்துவது தொடர்பாக பொருத்தமான சட்ட திருந்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதுவரையில் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடற்றொழிலாளர்கள் கடற்றொழில் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.
அதேபோன்று, கற்பிட்டி பிரதேசத்தில் இழுவைமடி வலையை பயன்படுத்துவதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையினால், அப்பிரதேசத்தில் குறித்த தொழில் முறையை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி பொருத்தமான தீர்வு வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
அதேவேளை கருத்து தெரிவித்த கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், சுயலாப அரசியல் நலன்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்ற அரசியல்வாதிகள் தமது தொழில்முறைக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும், விஞ்ஞான ரீதியாக நாரா நிறுவனத்தினால் ஆய்வு செய்து அனுமதிக்கப்பட்ட பிரதேசங்களில் தொழில் செய்வதற்கு ஏற்றமுறையில் சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு தமது வாழ்வாதாரத்தினை உறுதிப்படுத்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முன்வைத்தனர்.
முன்னதாக, யாழ்ப்பாணம், மன்னார், கற்பிட்டி போன்ற பிரதேசங்களை சேர்ந்த கடற்றொழிலாளர்கள், கொழும்பு புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், நேரடியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஊடகப் பிரிவு: கடற்றொழில் அமைச்சர் – 28.02.2022