“ஒரு நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நேற்று முதல் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
“ஒரு நாடு, ஒரே சட்டம்” என்பதற்கான ஜனாதிபதி செயலணியானது 2021 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதியால் நிறுவப்பட்டது.
கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையிலான இந்த குழுவுக்கு, இலங்கைக்குள் ஒரே நாடு, ஒரே சட்டம் மற்றும் சட்ட வரைவைத் தயாரித்து, நீதி அமைச்சினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் திருத்தங்களை ஆய்வு செய்து பொருத்தமான திருத்தங்கள் உள்ளதா எனத் தீர்மானித்து பொருத்தமானதாகக் கருதப்படும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் பணி வழங்கப்பட்டிருந்தது.
இதன்படி, பொது மக்கள் மற்றும் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய நிபுணர்கள் குழுவின் கருத்துக்களைப் பெறுவதற்கு செயலணிக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கும் வகையில் காலத்தை நீட்டித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.
பணிக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை தகுந்த செயல் திட்டத்துடன் அடுத்த மூன்று மாதங்களுக்குள் செய்து முடிக்க வேண்டும்.