வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபை உருவாக்கத்திற்காக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்கள் தமது இன் உயிர்களை தியாகம் செய்துள்ளார்கள். அவர்களின் தியாகத்திற்காக அவர்கள் கண்ட கனவு மெய்ப்பட வேண்டும் என்று அக்கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் இதுவரைகாலமும் உயிர் நீத்த அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்தையும் அதன் சுற்றயல் பகுதிகளான சம்மாந்துறை, வீரமுனை, வளத்தாப்பிட்டி, மல்வத்தை, அட்டப்பள்ளம், திராய்க்கேணி கிராமங்களையும் சேர்ந்த தியாகிகளின் குடும்பங்களை கௌரவிக்கும் நிகழ்வு காரைதீவு ‘லேடி லங்கா’ மண்டபத்தில் ஈபிஆர்எல்எப் கட்சியின் அரசியல் உயர்பீட உறுப்பினர் சின்னையா தோழர் சர்மா தலைமையில் நடைபெற்றது.
சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் அதனை பாதுகாப்பதற்காகவும் பெருந்தொகையான போராளிகள் தங்களது இன்னுயிர்களை ஆகுதி ஆக்கினர். மேலும் 13க்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கோணங்களில் கருத்துக்கள் பரிமாறிக்கொண்டு இருக்ககூடிய இன்றைய காலகட்டத்தில் வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண அரசாங்கத்தை வழி நடத்தி சென்ற ஈபிஆர்எல்எப் தியாகிகளையும் அவர்களது குடும்பங்களையும் கௌரவிக்கின்ற நிகழ்வானது மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.
அதேநேரம், எமது தோழர்கள் அன்றைய காலத்தில் மாகாண சபை முறைமையைப் பொறுப்பெடுத்து அதனை வினைத்திறன் மிக்கதாக வழிநடத்திக் கொண்டு மேலும் முன்னேறிச் செல்வதென்று கனவு கண்டார்கள். அதற்காகவே தமது உயிர்களை தியாகம் செய்தார்கள். ஆனால் தற்போது மாகாண சபை முறைமையே கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, எமது தோழர்களின் கனவு மெய்ப்பட வேண்டும். எமது மக்கள் அமைதியாக, சுதந்திரமாக, சுயநிர்ணயத்துடனாக வாழும் காலம் உருவாக்கப்பட வேண்டும். அதற்காக நாம் அனைவரும் தொடர்ச்சியாக உழைக்க வேண்டும் என்றார்.
இந் நிகழ்வில் உயிர் நீத்த தியாகிகளின் புகைப்படங்களுக்கு அவர்களது உறவுகள் தீபச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தியதுடன், உயிர் நீத்த தியாகிகளின் புகைப்படம் தாங்கிய நினைவு படங்கள் தோழர்களின் குடும்பங்களுக்கு கையளிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் முன்னாள் வடக்கு மகாண சபை உறுப்பினர் தியாகராசா மற்றும் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களான புண்ணியநாதன் கரன், நாகராசா சங்கர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தோழர் வரதன் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புக்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.