உக்ரைனில் போருக்கு நடுவே சிக்கித் தவிக்கும் பொறியியல் மூன்றாமாண்டு மாணவர் தனது செல்ல நாய்க்குட்டி இல்லாமல் நாட்டை விட்டு வெளியேற மறுத்துள்ளார். இதனால் அவர் வெளியேறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
கிழக்கு உக்ரைனில் உள்ள கார்கிவ் நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் ரேடியோ எலக்ட்ரானிக்ஸில் படிக்கும் இந்திய மாணவர் ரிஷப் கௌஷிக்.
உலகமே அதிர்ச்சியோடு உற்றுக் கவனித்துக்கொண்டிருக்கும் இவ்வளவு களேபரத்திற்கு மத்தியிலும் இவருக்கு தனது செல்ல நாய்க்குட்டியை விட்டு பிரிய மனமில்லை. தன் அன்பிற்குரிய வாயில்லா ஜீவன் மீதான நேசத்தின் காரணமாக தற்போது இந்தியா திரும்புவதில் தொடர்ந்து நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்.
தனது செல்ல நாய்க்குட்டிக்கு அவர் வைத்துள்ள பெயர் மாலிபு. அதனையும் தன்னோடு அழைத்துக்கொண்டு இந்தியாவுக்கு வரவேண்டும் என்பதுதான் அவரது ஆசை. அதற்கான அனைத்து சட்ட நடைமுறைகளையும் உரிய விதிமுறைகளை தான் பின்பற்றுவதாகவும் அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளதாக அவர் கூறுகிறார். ஆனால் மேலும் மேலும் ஆவணங்கள் கோரப்பட்டு அதிகாரிகளால் அவர் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்.
இதுகுறித்து இந்திய அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது. வீடியோ பிரேமில் தனது செல்ல நாய்க்குட்டியை அறிமுகப்படுத்தி அவர் கூறியுள்ளதாவது: கடந்த பிப்ரவரி மாதம் கார்கிவ் நகரில் ஒரு நாய்க்குட்டி ஆதரவற்று சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்ததும், மீட்டுக்கொண்டு வந்து நான் அதை வளர்க்கத் தொடங்கினேன். இந்த நாய்க்குட்டிக்கு மாலிபு என்று பெயர் வைத்துள்ளேன். அதிகாரிகள் எனது விமான டிக்கெட்டை அவர்கள் கேட்கிறார்கள். உக்ரேனிய வான்வெளி மூடப்பட்டிருக்கும் போது நான் எப்படி விமான டிக்கெட்டைப் பெற முடியும்?
புதுடெல்லியில் உள்ள இந்திய அரசின் விலங்குத் தனிமைப்படுத்தல் மற்றும் சான்றிதழ் சேவை (AQCS) மற்றும் உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகத்தை அணுகியதாகவும் ஆனால் பலனில்லை. டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஒருவரை அழைத்து என் பிரச்சினையை சொன்னேன். மறுமுனையில் இருந்த நபரோ கன்னாபின்னாவென்று என்னை திட்டிவிட்டார். என்னுடைய கோரிக்கைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை.
எனது விமானம் பெப்ரவரி 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று என்ற நிலையில் தற்போது ஊருக்கு செல்லாமல் நான் இங்கே சிக்கிக்கொண்டேன். (தனது நாய்க்கட்டியைக் காட்டி) தொடர்ந்து குண்டுவெடிப்புச் சத்தங்களால் இந்த மாலிபு நாய்க்குட்டி மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளது. எப்பொழுதும் அது அழுதுகொண்டிருக்கிறது. இந்திய அரசாங்க அதிகாரிகள், தயவுகூர்ந்து உங்களால் முடிந்தால், எங்களுக்கு உதவுங்கள். கீச்வில் உள்ள இந்திய தூதரகம் கூட எங்களுக்கு உதவவில்லை. இதனால் மேற்கொண்டு எதுவும் செய்யமுடியாமல் தவிக்கிறோம்.” என்று அவர் இந்திய அரசாங்கத்திடம் தனது முறையீட்டை முன்வைத்துள்ளார்.