இலங்கைக்கு எதிரான 2வது ரி20 ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2வது வெற்றியை பதிவு செய்து தொடரைக் கைப்பற்றியிருக்கிறது இந்தியா.
தா்மசாலாவில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் இலங்கை 20 ஓவா்களில் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ஓட்டங்களை பெற்றது. இலங்கை விரட்டிய இந்தியா 17.1 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 186 ஓட்டங்களை பெற்று வென்றது.
இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில், இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. இதனிடையே, காயம் காரணமாக முதல் ஆட்டத்தில் பங்கேற்காத இந்திய வீரா் ருதுராஜ் கெய்க்வாட், தொடரிலிருந்து விலகியுள்ளாா். இலங்கை அணியில் ஜெஃப்ரி வாண்டா்சே, ஜனித் லியனாகே ஆகியோருக்குப் பதிலாக பினுர ஃபொ்னாண்டோ, தனுஷ்க குணதிலகா ஆகியோா் இணைந்திருந்தனா்.
நாணயச்சுழற்சியில் வென்ற இந்தியா களத்தடுப்பை தோ்வு செய்தது. முதலில் ஆடியஇலங்கையில் தொடக்க வீரா் பதும் நிசங்க அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா். மற்றொரு தொடக்க வீரர் தனுஷ்க குணதிலக, 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, பின்னா் வந்த சரித் அசலங்க (2), கமில் மிஷார (1), தினேஷ் சந்திமல் (9) ஆகியோா் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினா்.
பதும் நிசங்க 11 பவுண்டரிகளுடன் 75 ஓட்டங்களுடன் கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார். முடிவில் கப்டன் தசுன் ஷானக 2 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 47, சமிக கருணாரத்ன 0 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
இந்திய பந்துவீச்சில் புவனேஷ்வா் குமாா், ஜஸ்பிரீத் பும்ரா, ஹா்ஷல் படேல், யுஜவேந்திர சஹல், ரவீந்திர ஜடேஜா என அனைவருமே தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் ஆடிய இந்திய அணியில் கப்டன் ரோஹித் 1 ஓட்டத்துடன் போல்டாகினார். உடன் வந்த இஷான் கிஷணும் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். வன் டவுனாக வந்த ஷ்ரேயஸ் ஐயா் அதிரடி காட்டி ஆட்டத்தின் போக்கை மாற்றினாா். அவருடன் சஞ்சு சாம்சனும் இணைய, இந்தியா வெற்றிப் படி ஏறத் தொடங்கியது. இந்நிலையில் சாம்சன் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 39 ஓட்டங்களுடன் விக்கெட்டை இழந்தாா்.
அடுத்து வந்த ஜடேஜா, இலங்கை பந்துவீச்சை சிதறடித்து, ஷ்ரேயஸுடன் இணைந்து அணியை வெற்றிக்கு வழி நடத்தினாா். இந்தியா இலக்கை எட்டியபோது ஷ்ரேயஸ் ஐயா் 44 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 74, ஜடேஜா 18 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 45 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
இலங்கை தரப்பில் லஹிரு குமார 2, துஷ்மந்த சமீர 1 விக்கெட் எடுத்தனா்.
இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 3வது ஆட்டம் தா்மசாலாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.