ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதல் காரணமாக நாடு திரும்ப முடியாத உக்ரைனிய சுற்றுலா பயணிகளின் வீசாவை நீடிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தகவல்கள் நாளை அமைச்சரவை கூடும் போது முன்வைக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சு தற்போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துடன் கலந்துரையாடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளுக்கு குறைந்தபட்சம் ஒரு மாத காலத்திற்கு விசா வழங்கப்படுவதாகவும், தற்போது நாட்டில் இருக்கும் உக்ரைனியர்களுக்கான விசாவின் காலாவதி திகதியை கருத்தில் கொண்டு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ரணதுங்க தெரிவித்தார்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கூற்றுப்படி, தற்போது 4,000 உக்ரைனிய பிரஜைகளும், 11,500 ரஷ்ய பிரஜைகளும் இலங்கையில் தங்கியுள்ளனர்.