வாக்குச்சாவடிக்குள் அத்துமீறியதாக கூறி திமுக நபரை சட்டையைக் கழற்ற வைத்துஅரை நிர்வாணமாக அழைத்துச் சென்ற விவகாரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ஆம் திகதி நடந்தது. சென்னை மாநகராட்சியின் 49-வது வார்டுக்கு உட்பட்ட ராயபுரம் சஞ்சீவிராயன் கோயில் தெருவில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடிக்குள் நரேஷ் என்பவர் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது. இவர் திமுகவைச் சேர்ந்தவர் என கூறி சத்தம் போட்ட அதிமுகவினர், நரேஷ் கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டினர்.
பின்னர் அவரை அதிமுகவினர் மடக்கிப் பிடித்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையிலேயே நரேஷை சிலர் தாக்கினர். அவரது கையை கட்டும்படி ஜெயக்குமார் கூறினார். இதைத் தொடர்ந்து, அந்த நபரின் சட்டையை கழற்றி கைகளை கட்டினர். அவரை அரை நிர்வாணமாக அழைத்துச் சென்று போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
நரேஷை அரை நிர்வாணமாக ஜெயக்குமார் அழைத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து காயம் அடைந்த நரேஷை போலீஸார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் கொடுத்த புகாரின் பேரில் அத்துமீறி நுழைதல், அரை நிர்வாணப்படுத்தி அடித்தல், குழப்பம் ஏற்படுத்துதல் உட்பட 8 பிரிவுகளின்கீழ் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது தண்டையார்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், நேற்றிரவு பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்த ஜெயக்குமாரை தண்டையார்பேட்டை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து அங்கு ஜெயகுமார் மகனும் முன்னாள் எம்.பி.யுமான ஜெயவர்தன் மற்றும் கட்சியினர் ஏராளமானோர் திரண்டனர். அங்கு ஜெயகுமார் இல்லாததால் சாலை மறியல் நடத்தினர்.
ஜெயகுமார் மகன் ஜெயவர்தன் கூறியதாவது:
என் தந்தை ரத்த அழுத்தம் நீரிழிவு ஆகியவற்றுக்காக மாத்திரை சாப்பிட வேண்டும். வீட்டில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர். கள்ள ஓட்டு போட்ட நபரை பிடித்துக் கொடுத்தது குற்றமா? முதல்வர் ஸ்டாலின் சர்வாதிகாரமாக செயல்பட்டு என் தந்தையை கைது செய்துள்ளார் என கூறினார்.
ஜெயகுமாரின் மனைவி ஜெயகுமாரி ”சாப்பிட உட்கார்ந்த என் கணவரை லுங்கியுடன் போலீசார் இழுத்துச் சென்றனர். அவர் எங்கு கொண்டு செல்லப்பட்டார் என்று கூட தெரியவில்லை. போலீசார் அராஜகமாக செயல்பட்டனர்” என்றார்.
அ.தி.மு.க., கண்டனம்
அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,வின் அராஜகத்தை, ஜனநாயகப் படுகொலையை தட்டிக்கேட்ட முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது செய்யப்பட்டு இருப்பதை கண்டிக்கிறோம். அவர் ஜனநாயகத்தை காப்பாற்றுகிற மனப்பான்மையோடு, கள்ள ஓட்டு போட வந்த தி.மு.க.,வினரை, கையும் களவுமாக பிடித்தபோது, ‘அவரை அடிக்க வேண்டாம்; காவல் துறையிடம் ஒப்படையுங்கள்’ என, ஜெயகுமார் கூறியுள்ளார்.
நீதிமன்றத்தில் ஜெயக்குமார் ஆஜர்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை நேற்று நள்ளிரவு 12:00 மணியளவில் சென்னை ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முரளி கிருஷ்ணன் முன்னிலையில் ஆஜர்படுத்தனர்.
ஜெயக்குமாரை மார்ச் 7ஆம் திகதி வரை (15 நாள்) நீதிமன்ற காவலில் வைக்க நீதிதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயக்குமார் தரப்பில் ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை (23) விசாரணைக்கு வருகிறது.
இதனிடையே, ஜெயக்குமாரின் கார் ஓட்டுநர் ஜெகநாதன், போலீஸாரிடம் அளித்த புகாரில் தன்னை தாக்கிய நபர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இந்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத 10 பேர் என்று குறிப்பிட்டு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதேபோல, புது வண்ணாரப்பேட்டை யில் ஆர்.கே.நகர் திமுக எம்எல்ஏ எபினேசர் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சக்திவேல் என்பவர் கைது செய்யப் பட்டுள்ளார்.