விசேட பண்ட மற்றும் சேவை வரி (ஜிஎஸ்ரி) சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணானவை என்று உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இன்று காலை பாராளுமன்றம் கூடிய போது, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம் அறிவிக்கப்பட்டது.
அரசியலமைப்பின் 121வது சரத்தின் விதிகளின் கீழ், ஜிஎஸ்டி சட்டமூலம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து, அது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை தாம் பெற்றதாக சபாநாயகர் மஹிந்த அபேவர்தன குறிப்பிட்டார்.
சட்டமூலத்தின் பல சரத்துக்கள் சுதந்திரமாகவும் கூட்டாகவும் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளன என்று சபாநாயகர் கூறினார்.
அதன்படி, முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு ஒத்துப்போவதில்லை என்பதாலும், முன்மொழியப்பட்ட திருத்தங்கள் கட்டமைப்பு சட்டமூலத்தை அடிப்படையாக மாற்றும் என்பதாலும், குறிப்பிட்ட திருத்தங்களை முன்வைப்பதைத் தவிர்ப்பதாக உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
விசேட பண்ட மற்றும் சேவை வரி சட்டமூலம் கடந்த ஜனவரி 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்படி இந்த சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியல் அமைப்புடன் ஒத்திசையாத நிலையில், அவற்றை பாராளுமன்றில் நிறைவேற்றுவதாக இருந்தால், சபையின் அனைத்து உறுப்பினர்களின் 3 இல் 2 பெரும்பான்மை தேவை, அல்லது பொதுஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் அவற்றை நிறைவேற்ற முடியும் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.