திருவள்ளூரில் ஆசிரமம் ஒன்றில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமும், அம்மாணவி விஷம் அருந்திவிட்டு உயிருக்காக போராடிக் கொண்டிருந்த மாணவியை மருத்துவமனைக்கு அனுப்பாமல் ஆசிரமத்தின் சாமியார் அறையிலே பூட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூண்டி அடுத்த வெள்ளாத்து கோட்டை கிராமத்தில் 20 ஆண்டுகளாக முனுசாமி என்ற பூசாரி ஆசிரமம் நடத்தி வருகிறார். முனுசாமி ஆசி வழங்கினால் பெண்களுக்கு திருமண பாக்கியமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என அந்த ஊர் மக்களால் நம்பப்படுகிறது.
இவரை நம்பி செம்பேடு பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது 20 வயது கல்லூரி மாணவியான ஹேமமாலினி கடந்த ஆண்டு உடல்நிலை சரியில்லாததால் ஆசிரமத்தில் சேர்ந்துள்ளார்.
ஹேமமாலினிக்கு நாகதோஷம் இருப்பதாகவும் அமாவாசை பவுர்ணமி பூஜை செய்தால் தோஷம் நீங்கும் எனக் கூறி கடந்த ஒரு வருடமாக ஆசிரமத்தில் தங்க வைத்துள்ளார் முனுசாமி. கடந்த ஒன்றரை வருடங்களாகவே கல்லூரிகளும் திறக்காமல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றதால், ஹேமமாலினியும் தனது பெரியம்மாவுடன் ஆசிரமத்திலேயே தங்கியுள்ளார். கொரோனா பரவல் குறைந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால், ஹேமமாலினியை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக பெற்றோர் ஆசிரமத்திற்கு சென்று பூசாரி முனுசாமியிடம் பேசியுள்ளனர்.
அப்போது அவர் பூஜைகள் இன்னும் முடியாததால் ஒரு சில வாரங்கள் மாணவி ஆசிரமத்திலேயே இருக்க வேண்டும் என முனுசாமி கூறியதால், கல்லூரிக்கு அங்கிருந்தே சென்று வந்துள்ளார் ஹேமமாலினி.
இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி மாணவியை பூஜைக்காக முனுசாமி அழைத்து சென்ற நிலையில், மறுநாள் காலை மாணவி வாந்தி எடுத்து மிகவும் சோர்வுடன் காணப்பட்டுள்ளார்.
மாணவியின் உடல்நிலை மோசமான நிலையில் ஆம்புலன்சை வரவழைக்குமாறு மாணவியின் பெரியம்மா முனுசாமியிடம் கூற, மருத்துவமனை எல்லாம் வேண்டாம் மந்திரம் போட்டால் சரியாகிவிடும் என கால தாமதம் செய்துள்ளார். பிறகு மாணவியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் ஆட்டோவாவது பிடித்து வருமாறு முனுசாமியிடன் கூற, அவர் ஆர அமர ஆட்டோவை வரவழைத்து மாணவியை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு ஹேமமாலினியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பூச்சி மருந்து குடித்திருப்பதால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.
உடனே அங்கிருந்து ஹேமமாலினியை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தும் காலதாமதம் ஏற்பட்டதால் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த பின், பூசாரி முனுசாமியிடம் மாணவியின் செல்போனை கேட்டுள்ளார் அவரது பெரியம்மா. முனுசாமி கொடுத்த செல்போனை ஓபன் செய்த போது அதில் பாஸ்வேர்டு கேட்டுள்ளது. வழக்கமாக ஹேமமாலினி செல்போனில் லாக் போடாமல் இருந்து வந்த நிலையில், தற்போது செல்போனை பூசாரி முனுசாமி தான் லாக் செய்திருப்பதாக சந்தேகம் அடைந்தனர். இதனையடுத்து பூசாரி முனுசாமி மீது காவல்நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள முனுசாமியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.