ஆப்கானிஸ்தானிலுள்ள ஒரு ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியிருந்த 7 வயது சிறுவனைக் மீட்க மேற்கொள்ளப்பட்ட 72 மணித்தியால போராட்டம் வெற்றியளிக்கவில்லை. சிறுவன் கிணற்றிற்குள்ளேயே உயிரிழந்தான்.
அந்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள சாபுல் (Zabul) வட்டாரத்தில் இருக்கும் கிணற்றில் ஹைதர் என்ற சிறுவன் சிக்கிக் கொண்டான்.
செவ்வாய்க்கிழமையன்று (15) 22 மீற்றர் ஆழமான கிணற்றில் சிக்கியதிலிருந்து, ஹைதரின் உடல்நிலை மோசமடைந்தது.
சிறுவனை மீட்கும் முயற்சியில் தலிபான் அரசாங்கம் முயற்சி மேற்கொண்டது. சிறுவன் சிக்கியுள்ள இடத்தை சென்றடைய சுரங்கத்தைத் தோண்டினர்.
கிணற்றில் சிக்கியிருக்கும் சிறுவன் தனது கைகளையும் மேல் உடலையும் அசைக்ககும் காணொளியி வெளியாகியிருந்தது.
எனினும் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் மீட்பு நடவடிக்கைகள் தோல்வியடைந்தன. உயிரிழந்த நிலையிலேயே சிறுவன் மீட்கப்பட்டான்.
ஜாபுல் மாகாணத்தின் கலாச்சாரம் மற்றும் தகவல் இயக்குநரகத்தின் தலைவர் ஷராபத் வயார் ஒரு வீடியோ கிளிப்பில், மாகாண அதிகாரிகள்- சிறுவனை மீட்க தங்களால் இயன்றதைச் செய்ததாகவும் ஆனால் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிட்டதாகவும் கூறினார்.
இந்த சம்பவம் ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சாதாரண மக்களை மட்டுமல்ல, ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் அதிகாரிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தற்காலிக பாதுகாப்பு அமைச்சர், தற்காலிக பொது சுகாதார அமைச்சர் மற்றும் தலிபான்களின் முக்கிய தலைவர் அனஸ் ஹக்கானி மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டதுடன், அங்கேயே இரவு முழுவதும் தங்கினர்.
இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் கூறுகையில், ஹைதரை வெளியே எடுக்க அவர்கள் தங்கள் வசம் உள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்தினர், ஆனால் வெற்றிபெற முடியவில்லை என்றார்.
அண்மையில் மொரோக்கோ சிறுவன் ஒருவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து, உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.