மனித உரிமைகள் மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீடுகள் தொடர்பில் கவனம் செலுத்தும் பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல்முறையாகும்.
பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு அடுத்த மாதம் விஜயம் செய்யவுள்ளதாக டொனால்ட் லூ நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற தொலைத்தொடர்பு சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் குழுவிடம் தெரிவித்தார்.
இலங்கைக்கான தனது விஜயத்தின் போது கவனம் செலுத்தும் பகுதிகளை அவர் குறிப்பிடாத நிலையில், மனித உரிமைகள் மற்றும் இருதரப்பு வர்த்தகம் பட்டியலில் முதலிடம் வகிக்கும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, இலங்கை தொடர்பான அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையில் மனித உரிமைகள் முக்கியமானவை என்பதை லூ அடிக்கோடிட்டுக் காட்டியிருந்தார்.
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக ஜூலி சுங் கொழும்பில் கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் அவரது விஜயம் இடம்பெறவுள்ளது.