28.1 C
Jaffna
December 21, 2024
Pagetamil
விளையாட்டு

IPL: இலங்கை இராணுவத்தில் பணியாற்றியவர் சென்னை அணியிலா?: மஹீஷ் தீக்ஷனவின் தெரிவிற்கு வலுக்கும் எதிர்ப்பு!

இலங்கை வீரர் மகீஷ் தீக்‌ஷனவை தெரிவு செய்தமைக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துக்கு தமிழ் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்துவருகின்றனர். எதிர்ப்புக்கள் வலுத்து வருவதால், தீக்‌ஷன விவகாரத்தில் சென்னை அணி பின்வாங்கலாமென்ற கருத்து ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் மெகா ஏலத்தில் மஹீஷ் தீக்‌ஷனவை ரூ.70 இலட்சத்திற்கு ஏலம் எடுத்திருந்தது சென்னை அணி. இதனையடுத்தே சென்னை அணியை புறக்கணிக்க வேண்டும் என்று கூற்றுகளுடன் சமூக ஊடகங்களில் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். அவர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றியதாலேயே இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து தமிழக ஊடக செய்திகளில்,

‘கொழும்புவை ஒட்டிய சேதவத்தை பகுதியைச் சேர்ந்த தீக்‌ஷன, சிறுவயதில் இருந்தே தனது பாட்டி பராமரிப்பில் வளர்ந்தவர். பாடசாலைக்காலத்தில் இருந்தே கிரிக்கெட்டில் ஆர்வமிக்கவராக இருந்தவர், அப்போது இருந்தே கழக அளவிலான போட்டிகளில் பங்கேற்று வந்துள்ளார்.

சென் பெனடிக் கல்லூரியில் கல்வி கற்ற போது 15 வயதிற்குட்பட்டவர்களிற்கான தேசிய ரீதியிலான தொடரில்,சிறந்த சகலதுறை வீரர் விருதை வென்றார். கொழும்பு ரோயல் கல்லூரிக்கு எதிரான முதல் போட்டியிலேயே சதம் அடித்தும் தனது திறமையை நிரூபித்தவர்.

எனினும், 19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை தேசிய அணியில் தீக்‌ஷனவுக்கு இடம் கிடைக்கவில்லை. காரணம் அவரின் உடல் எடை. ஆரம்பத்தில் உடல் எடை அதிகமாக இருந்ததுடன், இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நடத்திய தோல் சோதனையிலும் தோல்வி அடைந்ததால் 19 வயதிற்குட்பட்ட அணிக்கான தேர்வில் இருந்து நிராகரிக்கப்பட்டார்.

பின்னர், தீக்‌ஷன இலங்கை இராணுவத்தின் கஜபா படைப்பிரிவில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றத் தொடங்கி இருக்கிறார். இலங்கை இராணுவத்தில் இணைந்ததில் இருந்து, கடுமையான உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து உடல் எடையை குறைத்த தீக்‌ஷன, மீண்டும் கிரிக்கெட்டை கையிலெடுத்தார். இலங்கை இராணுவ கிரிக்கெட் அணியில் இணைந்து தீவிர பயிற்சிகளை தொடங்கியபோது அந்த அணியின் பயிற்சியாளராக இருந்தவர் அஜந்த மெண்டிஸ்.

அதோடு இலங்கையின் முன்னணி வீரர்கள் திசார பெரேராவும், தினேஷ் சண்டிமாலும் இலங்கை இராணுவத்தில் இணைந்து, இராணுவ அணியில் ஆட ஆரம்பித்தனர். இந்த அறிமுகங்கள், ஆலோசனைகளுடன், திறனை மேம்படுத்திய தீக்‌ஷன, இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்தார்.

ரி20 உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் ஒருவராக இருந்த தீக்‌ஷன, அதுதொடர்பாக ஒருபேட்டியில் பேசும்போது இலங்கை இராணுவம் குறித்து, “அஜந்த மெண்டிஸ் இராணுவத்தில் எனது முதல் பயிற்சியாளராக இருந்தார். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று எனக்கு அறிவுரைகள் வழங்கி எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு இலங்கை இராணுவத்திடம் இருந்து பெரும் ஆதரவு உள்ளது. இராணுவம் கிரிக்கெட் விளையாட்டுக்கு எந்தளவுக்கு ஆதரவு அளித்துள்ளது என்பதற்கு நாங்களே சாட்சி” என்று பேசினார்.

அதேநேரம் இலங்கை ராணுவத்தின் அதிகாரபூர்வ இணைய பக்கத்திலும், தீக்‌ஷனா குறித்து கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

இதுமட்டுமில்லாமல், தீக்‌ஷன, 2009இல் நடந்த ஈழ இறுதிப் போரில் இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை இராணுவ ஜெனரல் சவேந்திர சில்வாவை தனது வாழ்வை மேம்படுத்த உதவியவர் என்றும் பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி ஈழத் தமிழர்கள் மீதான இலங்கையின் இனப்படுகொலை மற்றும் தமிழக மீனவர்கள் மீதான ஏரளமான தாக்குதலுக்கு காரணமாக இருந்த இலங்கை இராணுவத்தின் ஒரு பகுதியாக இருக்கும் தீக்‌ஷனவை ஏலத்தில் எடுத்ததன் தொடர்ச்சியாக இந்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதில் சென்னை அணி நிர்வாகம் என்ன முடிவு எடுக்க போகிறது என்பது தான் இப்போதைய எதிர்பார்ப்பு’ என தெரிவித்துள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் இந்திய வீரர் அஸ்வின்!

Pagetamil

வெற்றியுடன் டிம் சவுதிக்கு பிரியாவிடை கொடுத்த நியூசிலாந்து!

Pagetamil

அனைத்துப் பல்கலைக்கழக மேசைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஆண், பெண் பிரிவுகளில் மொரட்டுவ, ஜே’புர அணிகள் சம்பியன்!

Pagetamil

அவுஸ்திரேலியா 445 ஓட்டங்கள்: திண்டாடும் இந்தியா!

Pagetamil

வழக்கமான ஃபோர்முக்கு திரும்பியது இலங்கை: வெறும் 42 ஓட்டங்களில் சுருண்டது!

Pagetamil

Leave a Comment