இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளிற்கிடையிலான ரி20 தொடர் இன்று ஆரம்பிக்கிறது. இரண்டு அணிகளிற்குமிடையிலான முதலாவது போட்டி இன்று பிற்பகல் சிட்னியில் இடம்பெறுகிறது.
கடந்த சில மாதங்களாக இலங்கை அணி மெருகேறி வரும் நிலையில், பலமான அவுஸ்திரேலிய அணியை சந்திக்கிறது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் சரித் அசலங்க, பத்தும் நிஸங்க போன்றவர்கள் அண்மைக்காலமாக ஜொலித்து வருகிறார்கள்.
தனுஷ்க குணதிலக்க மீதான தடை முடிவடைந்துள்ளதால் அவர் மீண்டும் ஆரம்ப துடுப்பாட்டக்காரராக களமிறங்குகிறார். இது இலங்கையை மேலும் வலுப்படுத்தும்.
அத்துடன், இலங்கையின் பந்துவீச்சும் அண்மைக்காலமாக மெருகேறி வருகிறது. அவுஸ்திரேலியாவிற்கு எதிராக இலங்கையின் சுழற்பந்துவீச்சு முக்கிய ஆயுதமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர, சுழற்பந்துவீச்சாளர்கள் வனிந்து ஹசரங்க , மஹீஷ் தீக்ஷன கூட்டணி அவுஸ்திரேலியவர்களிற்கு நிச்சயம் தலையிடி கொடுப்பார்கள்.
அவுஸ்திரேலியா அணியை பொறுத்தவரையில், பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பதவி விலகிய பின்னர், இடைக்கால பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டின் கீழ் ஆடும் முதல் போட்டியாகும்.
அத்துடன், முன்னணி வீரர்கள் சிலருக்கு ஓய்வளிக்கப்பட்டு, அவர்களிற்கு பதிலாக மாற்று வீரர்களிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. டேவிட் வோர்னர், மிட்செல் மார்ஷ் போன்றவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
டிராவிஸ் ஹெட் முதல் மூன்று போட்டிகளிலும் ஆடமாட்டர்.
தொடக்க வீரர்களாக பென் மெக்டெர்மாட் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ரி20 உலகக் கோப்பையின் குழு நிலைப் போட்டியில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.
முதலில் ஆடிய இலங்கை 6 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை பெற்றது. பதிலளித்ததடிய அவுஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் மற்றும் 18 பந்துகள் மீதமுள்ள நிலையில் எளிதாக துரத்தியடித்தது.
இன்றைய ஆட்டம் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.