வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு புள்ளியான -இதயபூமியான – கொக்கிளாய் தொடக்கம் நாயாறு வரையான தமிழ் மக்களுக்கு சொந்தமான பாரம்பரிய நிலங்களை கனிய மணல் அகழ்வு எனும் போர்வையில் கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிராக போராட்டம் இடம்பெறவுள்ளது.
இந்த பகுதிகளிலுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான பாரம்பரிய நிலங்களை கனிய மணல் அகழ்வு எனும் போர்வையில் கையகப்படுத்தும் நோக்கோடு நில அளவீடு மேற்கொள்ளப்பட்டு சுவீகரிப்பதற்க்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக அரசால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே சிங்கள குடியேற்றங்களாலும் ,இராணுவ ஆக்கிரமிப்பாலும் மகாவலி எல் வலயத்தாலும் , வன ஜீவராசிகள் திணைக்களம் , வளவள திணைக்களம் , தொல்லியல் திணைக்களம் ,போன்ற அரச இயந்திரங்களின் திட்டமிட்ட ஆக்கிரமிப்பால் இருப்பு கேள்விக்குள்ளாகி வரும் தமிழ் மக்களின் எல்லை கிராமங்களில் மேலதிகமாக கனிய மணல் கூட்டுதாபனத்துக்கு என மிகுதி நிலங்களையும் அபகரிக்கும் வேலையை அரசு மிக திட்டமிட்டு முன்னெடுத்துவருகின்றது.
எனவே தமிழ் மக்களுக்கு சொந்தமான இந்த நிலங்களை அபகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொக்கிளாய் கிராம மக்களால் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
நாளை (12) சனிக்கிழமை, காலை 9.30 மணிக்கு கொக்கிளாய் பாடசாலை முன்பாக போராட்டம் இடம்பெறவுள்ளது.
எனவே அனைத்து தரப்பினரின் ஆதரவையும் வழங்குமாறு கொக்கிளாய் எல்லை கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.