புதுச்சேரியில் ‘ஹிஜாப் அணிந்து வர தடையில்லை – வகுப்பில் சீருடையுடன் அமர்வதே வழக்கம்’ என்று கல்வித்துறை தெரிவித்தது.
புதுவை அரியாங்குப்பத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய மாணவி ஒருவர் தலையில் அணியும் ஹிஜாபை அணிந்து வந்தார். அதை அகற்றிவிட்டு பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளி முதல்வர் வலியுறுத்தியதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக பல்வேறு அமைப்பினர் பள்ளிக்குச் சென்று விசாரித்தனர். அப்போது பள்ளி முதல்வர், வகுப்பறையில் மாணவர்களிடையே பிரிவினை வரக்கூடாது என்பதற்காக ஹிஜாபை அணிந்து வருவதை தவிர்க்கும்படி கோரியதாகவும், வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்று கூறினார்.
இதையடுத்து, இதுதொடர்பாக கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடை சந்தித்து மனுவும் தரப்பட்டது. இச்சூழலில் பள்ளிக்குச்சென்று விசாரித்த முதன்மைக் கல்வி அலுவலர் மீனாட்சி சுந்தரம், பள்ளி மாணவி ஹிஜாப் அணிந்து வரலாம் என்று தெரிவித்ததாக தகவல் வெளியானது.
புதுச்சேரியில் ஹிஜாப் அணிந்துவந்த மாணவிக்கு ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக ஆளுநர் தமிழிசையிடம் கேட்டதற்கு, “புதுச்சேரியில் மாணவர்களுக்கான சீருடையைப் பொருத்தமட்டில், பள்ளிக் கல்வித்துறை அதற்கான நடவடிக்கை எடுக்கும்” என்றார்.
கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடுவிடம் கேட்டதற்கு, “இப்புகார் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி முதன்மை கல்வி அலுவலரிடம் அறிக்கை விவரம் கேட்டுள்ளேன். வழக்கமாக பள்ளியில் அனைவரும் சீருடையில் வகுப்பறைக்கு வருவது வழக்கம். மாணவர்களிடையே பாகுபாடு இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் பள்ளிகளில் அரசு 2 செட் சீருடைகளை தருகிறது. அதே நேரத்தில் மற்றவர்களின் கலாச்சாரத்தை நாங்கள் தடுக்கவில்லை.
வழக்கமாக ஹிஜாப் அணிந்துபள்ளிக்கு வந்தவுடன், தனியறைக்கு சென்று சீருடை அணிந்துதான் வகுப்பறைக்கு வருவார்கள். எனினும், இவ்விஷயத்தில் அனைத்தும் விசாரணை நடத்தப்பட்டு, அறிக்கை பெறப்பட்டு, அரசிடம் அளிக்கப்படும். அரசு முடிவினை அறிவிக்கும்” என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் பல்வேறு அமைப்பினர் முதல்வர் ரங்கசாமியிடம் இதுபற்றி புகார் அளித்தனர். புகார் பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்; இதுபோன்ற நிலை இனி உருவாகாது என்று முதல்வர் தெரிவித்ததாக சமூக அமைப்பினர் குறிப்பிட்டனர்.