துணை மருத்துவப் பணியாளர்கள், தாதியர்கள் உட்பட சுகாதாரத் துறையைச் சேர்ந்த பல தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று நான்காவது நாளாகத் தொடர்கிறது.
இந்த போராட்டத்திற்கு நோயாளிகள், பொதுமக்கள் மற்றும் பிற சங்கங்களில் இருந்து ஆதரவு கிடைத்துள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
எனவே தங்களது ஏழு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
நோயாளிகள் அசௌகரியங்களுக்கு உள்ளான போதிலும், சுகாதார சேவையின் நன்மைக்காகவே அவர்கள் இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுப்பதாக ரவி குமுதேஷ் குறிப்பிட்டார்.
சுகாதாரப் பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், குறிப்பாக தற்போதைய சம்பளத் திட்டம் எதிர்கால சந்ததியினருக்குத் தீர்க்கப்படாமல் இருக்கக் கூடாது என்றார்.
ஒவ்வொரு விஷயத்தையும் அல்லது ஒரு பிரச்சினையையும் அரசியலாக்கக் கூடாது என்றும் குமுதேஷ் குறிப்பிட்டார். கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் உடனடியாக பணிக்கு திரும்புவோம் என்றார்.
மருத்துவமனை ஊழியர்கள் தொடர்பில் சில அறிக்கைகளை வெளியிட்டமைக்காக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரவி குமுதேஷ் குறிப்பிட்டார்.
ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தொழிற்சங்கங்கள் தமது வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தாலும், களுபோவில வைத்தியசாலை ஊழியர்கள் கடமைக்குத் திரும்பாமல் போகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த மூன்று நாட்களாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தினால் பொது மக்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.