இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் பென்யமின் நெத்தன்யாஹூவின் ஊழல் வழக்கில் முக்கிய சாட்சிக்கு எதிராகக் காவல்துறை அதிநவீன உளவு மென்பொருளைப் பயன்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் NSO நிறுவனம் தயாரித்த பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் பல நாட்டு தலைவர்களை கண்காணித்ததாக சர்ச்சை எழுந்தது. இந்திய அரசும் அதனை வாங்கி, நாட்டின் முக்கிய பிரமுகர்கள், செயற்பாட்டாளர்களை கண்காணித்ததாக சர்ச்சை எழுந்தது.
இந்த சர்ச்சைகளை தொடர்ந்து இலங்கையிலும் அதிநவீன உளவு மென்பொருள் மூலம் கண்காணிப்பு இடம்பெறுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிரான குற்றவியல் விசாரணையில் அரசின் சாட்சியான ஷ்லோமோ ஃபில்பரின் தொலைபேசியை இஸ்ரேல் பொலிசார் இரகசியமாக கண்காணித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை நெதன்யாகுவிற்கு எதிரான விசாரணையின் போது, ஷ்லோமோ ஃபில்பரின் தொலைபேசி கண்காணிக்கப்பட்டதை குறிப்பிட்ட சட்டத்தரணிகள், ஃபில்பரின் சாட்சியத்தை தாமதப்படுத்தக் கோரினார்கள்.
நீதிமன்ற அனுமதியின்றி ஃபில்பரின் தொலைபேசியை பொலிசார் கண்காணித்துள்ளனர்.
இதேவேளை, பிந்தையை நிலவரத்தின்படி, ஃபில்பர் மட்டுமல்லாமல் நாட்டில் மேலும் பலரை பொலிசார் கண்காணித்தது உறுதியாகியுள்ளது.
கால்கலிஸ்ட் செய்தித்தாள் இன்று வெளியிட்ட தகவல்படி, மூத்த அரசாங்க அதிகாரிகள், மேயர்கள், செயற்பாட்டு தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆலோசகர்களுக்கு எதிராக பெகாசஸ் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.