2015 ஆம் ஆண்டு போன்று பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், நாட்டை கட்டியெழுப்பவும், மக்களை வலுவூட்டவும் கட்சிக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்படுமாயின், நாடு மற்றும் நாட்டு மக்கள் சார்பாக இந்த சவாலை ஏற்றுக்கொள்ள தானும் ஐக்கிய தேசியக் கட்சியும் தயார் என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடியை மக்கள் உணர்ந்து அதற்கு சந்தர்ப்பம் வழங்குவார்கள் என கருணாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் நிதி அமைச்சரும் கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான அவர், சனிக்கிழமை (05) பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வசே மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சியில் ஏதேனும் குறைபாடுகள் மற்றும் தவறுகள் இருப்பின் அவற்றைத் திருத்திக் கொண்டு அணியாக முன்னோக்கிச் சென்று கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதே கட்சியின் தலைமையின் நோக்கமாகும்.
“ஒரு அரசியல் கட்சி என்ற வகையில், நாட்டின் மற்றும் மக்களின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் புதிய மற்றும் தீவிரமான முறையில் சிந்தித்து செயல்பட வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.