திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்துக் கல்லூரியில் அபாய ஆடை தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற சம்பவத்தினை கண்டித்து இன்றும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது
திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இன்று (03) குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
அதிபரை அடித்த ஆசிரியை வேண்டாம், வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், திணிக்காதே திணிக்காதே மாற்று கலாச்சாரத்தை திணிக்காதே மற்றும் உனது கலாச்சாரம் உனக்கு எனது கலாச்சாரம் எனக்கு என்ற சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
சர்ச்சைக்குரிய ஆசிரியை எமது பாடசாலைகளுக்கு வேண்டாம் என, ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் சேகரிக்கப்பட்ட கையொப்பம் அடங்கிய மகஜர் ஒன்றும் திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தின் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரனிடம் கையளிக்கப்பட்டது
இதன்போது கருத்து தெரிவித்த வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரன், நேற்றைய தினம் இடம்பெற்ற சம்பவத்தின்போது தான் பிரதேசத்தில் இல்லை எனவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வலயக்கல்வி பணிமனையில் இருந்து அதிகாரிகள் அனுப்பப்பட்டு இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்
மேலும் குறித்த ஆசிரியையை தற்காலிகமாக வலயக்கல்வி அலுவலகத்தில் கையொப்பம் இடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த ஆசிரியையை பாடசாலைக்கு சேவைக்கு அமர்த்தியது தொடர்பில் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்தார்
இருப்பினும் குறித்த ஆசிரியை தொடர்பில் உறுதியான முடி ஒன்று எட்டப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது
குறித்த ஆர்ப்பாட்டத்தில் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்துக்கல்லூரி ஆசிரியர்கள் பெற்றோர்கள் சமூக அமைப்புகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
இவ்வாறு இருக்கையில் நேற்று இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் ஸ்ரீ சண்முகா இந்துக்கல்லூரியின் ஆசிரியை குரல் பதிவு மற்றும் வீடியோ காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், தமது கடமைகளை பொறுப்பேற்ற நேற்றையதினம் கல்லூரிக்கு சமூகமளித்திருந்த நிலையில் தாம் அணிந்திருந்த ஆடை தொடர்பில் பாடசாலை நிர்வாகம் மற்றும் அன்றைய தினம் கல்லூரிக்கு வருகை தந்த ஒருசிலருக்கு முன்னிலையில் தம் பணியினை ஆரம்பிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து சற்று முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தாம் அதனை வீடியோ காணொளி மூலம் பதிவு செய்ததாகவும் வீடியோ காணொளி பதிவு செய்த தொலைபேசியும் பறிக்கப்பட்டு தன்னை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்றைய சர்ச்சையை தொடர்ந்து, குறிப்பிட்ட ஆசிரியை அடித்ததாக தெரிவித்து அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிபர் தன்னை தாக்கியதாக குறித்த ஆசிரியரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
–ரவ்பீக் பாயிஸ் –