முல்லைத்தீவு மாவட்டத்தின் மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐந்து பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுளது.
சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று (01) குறித்த வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஐந்து பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடித்து அன்றைய தினத்துக்கு வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் 13 ஆம் திகதி முதல் காணாமற் போயிருந்த சிறுமி, கொலை செய்யப்பட் நிலையில் 18 ஆம் திகதி சடலமாக அவரது வீட்டிலிருந்து சுமார் 400 மீற்றர் தொலைவில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறுமியின் அத்தானினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கர்ப்பம் தரித்ததையடுத்து, குடும்பத்தினர் சட்டவிரோத கருக்கலைப்பை மேற்கொண்ட போதே உயிரிழந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.
இதைடுத்து தந்தை, தாய், சகோதரி, சகோதரியின் கணவன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படாத நிலையில் கணொளி ஊடாக இந்த வழக்கினை விசாரித்த நீதவான் வழக்கு விசாரணை நிறைவடையாத நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.




