கடந்த மாதம் 28ஆம் திகதி மாலை பம்பலப்பிட்டி கிரசன்ட் லேனில் அமைந்துள்ள எட்டு மாடிகளைக் கொண்ட சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 8 வது மாடியில் இருந்து தவறி விழுந்து சர்வதேச பாடசாலையில் கல்வி பயிலும் 15 வயதுடைய பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளமை தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்த 15 வயது சிறுவன் ஐஸ் போதைப்பொருள் பாவித்திருப்பது, பிரேத பரிசோதனையில் தெரிய ந்துள்ளது.
கோடீஸ்வர தொழிலதிபரின் ஒரே மகனான ராஜா அபிலாஷ் என்ற சிறுவனே உயிரிழந்தார்.
சம்பவத்தன்று பாடசாலையிலிருந்து திரும்பி வந்து சிறிது நேரத்தில் கீழே விழுந்துள்ளார்.
மாணவனின் குடியிருப்பு 5வது மாடியில் உள்ளது. ஆனால் அவர் ஏன் மொட்டை மாடிக்கு வந்தார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
அவர் பாடசாலையிலிருந்து முச்சக்கர வண்டியில் மாலை 3.00 மணியளவில் வீடு திரும்பினார், ஆனால் அப்போது வீட்டில் யாரும் இல்லை. பின்னர் அவர் 8 வது மாடிக்கு சென்றார்.
அடுக்குமாடி குடியிருப்பின் உச்சிக்கு சென்று கீழே குதித்தாரா அல்லது யாரேனும் தள்ளினார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏழு மாடிகள் இருந்ததாகவும் 8வது மாடி காலியாக (மொட்டை மாடி) இருந்ததாகவும் பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த நீதவான் சிலானி பெரேராவின் உத்தரவின் பேரில் நீதித்துறை வைத்திய அதிகாரி டொக்டர் ராகுல் ஹக்கினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பிரேத பரிசோதனை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் நடைபெற்றது.
சம்பவ தினத்தன்று மாணவன் வீட்டிற்கு வந்தபோது, வீட்டில் பெற்றோர் இருக்கவில்லை. மாணவன் தனது தாயாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அன்றைய தினம் டியூஷன் வகுப்புகள் நடைபெறாது என்று கூறியுள்ளார்.
வெள்ளவத்தையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த தாயார், அங்கு வருமாறு மாணவனை அழைத்துள்ளார்.
இரண்டாவது மாடியில் குடியிருப்பவர், வெளியே ஏதோ சத்தம் கேட்டு பார்த்த போது, மாணவன் தரையில் விழுந்திருந்தார்.
காயமடைந்த மாணவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவனின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆன்டிஜென் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட போது, அவருக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதுடன், பிரேத பரிசோதனையில் அவர் ஐஸ் மருந்து உட்கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.




