வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கூட்டத்தில் மக்கள் நலன் சார்ந்து முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டமானது வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராசா மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான கு.திலீபன் ஆகியோரின் இணைத் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூட்டத்தில் நேற்று (31.01) காலை முதல் பிற்பகல் 2.15 வரை இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் புகைப்படம் எடுக்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், அதன் பின் உள்ளே செய்தி சேகரிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
குறித்த அறிவிப்பானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் அவர்களால் தெரிவிக்கப்பட்டதாக மாவட்ட செயலக தகவல் தொடர்பாடல் உத்தியோகத்தர் உப்புல் பாலசுரிய ஊடாக ஊடகவியலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து காலை 9 மணியில் இருந்து பிற்பகல் 2.15 வரை ஊடகவியலாளர் மண்டப வாயிலில் காத்திருந்து கூட்டம் முடிவடைந்த பின் அது தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.
மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் மக்கள் நலன் சார்ந்த விடயங்கள் பேசப்படும் போது அதன் உண்மை தன்மை மற்றும் அதன் நிலமைகள் தொடர்பிலும், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகளின் நிலைப்பாடு தொடர்பிலும் மக்கள் அறிந்து இருக்க வேண்டியது ஒரு ஜனநாயக உரிமை என்பதுடன், அது தொடர்பில் மக்களுக்கு கருத்துக்களை கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பும் ஊடகங்களுக்கு இருக்கின்றது. இந்த நிலையில் ஊடகவியலாளர்களின் சுதந்திரமான செயற்பாட்டுக்கும், தகவல் வெளியிடும் உரிமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக அதிகாரிகள் இவ்வாறு நடந்து கொண்டமை குறித்தும் ஊடகவியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன் அவர்களிடம் கூட்டம் முடிவடைந்த பின் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது, அவ்வாறு தெரிவிக்கப்பட்டது எனக்கு தெரியாது. அவ்வாறு நாம் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை. இது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் பேசுவதாகவும், இனிவரும் காலங்களில் வழமை போன்று ஊடகவியலாளர்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.