கலகெடிஹேனவில் ஜே.வி.பி.யின் பேரணி மீது முட்டை தாக்குதல் நடத்தியதில் தனக்கு தொடர்பு இல்லை என தெரிவித்த சுற்றுலாத்துறை அமைச்சரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க, சம்பவம் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மற்றும் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் மட்டுமன்றி நாட்டின் எந்தப் பகுதியிலும் அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கான ஜனநாயக உரிமையை தாம் அங்கீகரித்து மதிப்பதாக ஜனாதிபதி மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு எழுதிய கடிதங்களில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளை தாம் அங்கீகரிக்கப் போவதில்லை எனவும், எனவே இச்சம்பவம் குறித்து முறையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்டவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பிரசன்ன ரணதுங்கவுக்கும் தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியான சில பதிவுகளையும் அமைச்சர் மறுத்துள்ளார்.