இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் முயற்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளாரா என கேள்வியெழுப்பியுள்ளார் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம்.
தமிழக மீனவர்களின் அத்துமீறலால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் நாசம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, இன்று பருத்தித்துறையில் மீனவர்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் தமிழ்பக்கத்திடம் கருத்து தெரிவித்த நா.வர்ணகுலசிங்கம், ‘கடந்த 3 நாட்களாகவே தமிழக மீனவர்களின் அத்துமீறல் மிக அதிகமாக உள்ளது. நேற்று நெடுந்தீவு தொடக்கம் வடமராட்சி கிழக்கு வரையான கடற்பிரதேசங்களிற்குள் ஏராளம் இந்திய படகுகள் உள்நுழைந்து, மீனவர்களின் வலைகளை அறுத்துள்ளன. இதனால் நேற்று மாத்திரமே சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான வலைகள் நாசமாகியுள்ளன.
இந்திய மீனவர்களின் கட்டுங்கடங்காத அத்துமீறலால் எமது மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாக அழிக்கப்படுகிறது.
இதை தடுத்து நிறுத்த வேண்டிய தமிழக முதலமைச்சரும், மீன்பிடி அமைச்சரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எமது இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டுமென்ற நோக்கத்துடனா தமிழக முதல்வர் செயற்படுகிறார்.
அவர் உடனடியாக செயற்பட்டு, இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும்.
இலங்கை அரசும், கடற்றொழில் அமைச்சரும் இதில் உடனடியாக தலையிட்டு, மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்’ என தெரிவித்தார்.