தமிழர் விடுதலைக் கூட்டணியை முழுமையாக கைப்பற்றியதாக மாற்று அணியினர் அறிவித்துள்ளனர். அந்த அணியினர் புதிய நிர்வாகமொன்றையும் தெரிவு செய்துள்ளனர். அத்துடன், இதுவரை செயலாளராக பதவிவகித்து வந்த வீ.ஆனந்தசங்கரி மீது ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்க குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணத்திலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் .இருந்த பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டு, அது சட்டத்தரணி வீ.ஆனந்தசங்கரியின் அலுவலகமென புதிய பெயர்ப்பலகை பொருத்தப்பட்டுள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் அண்மைக்காலமாக உள்கட்சி மோதல் உச்சமடைந்துள்ளது. முன்னாள் யாழ் மாநகரசபை உறுப்பினர் அரவிந்தன், கட்சியை கைப்பற்ற தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தார்.
அவரை கட்சியிலிருந்து இடைநிறுத்தியதாகவும், சிரேஷ்ட உப தலைவர் என்ற பொறுப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாகவும் வீ.ஆனந்தசங்கரி அறிவித்தார்.
கட்சியின் வருடாந்த பொதுக்குழுவை கூட்டவில்லை, யாப்பின்படி 2 வருடங்களிற்கு ஒருமுறை கட்சி நிர்வாகம் தெரிவு இடம்பெறவில்லையென ஆனந்தசங்கரி மீது மாற்று அணியினர் சரமாரி குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தனர்.
இந்த இழுபறிகள் நீடித்து வந்த நிலையில், அண்மையில் கிளிநொச்சியிலுள்ள அலுவலகத்தில் கட்சியின் கூட்டமொன்று இடம்பெற்ற நிலையில், அதில் பாதியிலேயே வீ.ஆனந்தசங்கரி வௌியேறியிருந்தார்.
இதில் தலைவராக இராசலிங்கம், செயலாளர் நாயகமாக மட்டக்களப்பை சேர்ந்த யோகராஜா தெரிவாகினர்.
இந்த கூட்டத்திலிருந்து ஆனந்தசங்கரி ஏற்கனவே வெளியேறியிருந்ததால், மீண்டும் இன்று விசேட பொதுக்குழு கூட்டம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று விசேட பொதுக்குழு கூட்டம் இடம்பெற்றது.
இதில் தலைவராக இராசலிங்கம், செயலாளர் நாயகமாக மட்டக்களப்பை சேர்ந்த யோகராஜா ஆகியோரின் தெரிவு அங்கீகரிக்கப்பட்டது.
சிரேஷ்ட உப தலைவராக அரவிந்தன் தெரிவாகினார். இணை பொருளாளராக சந்திரன், திருஞானசம்பந்தர் ஆகியோர் தெரிவாகினர். நிர்வாக செயலாளராக கௌரிகாந்தனும், உபதலைவர்களாக 5 பேரும் தெரிவாகினர்.
கூட்டத்திற்கு ஆனந்தசங்கரி அழைக்கப்பட்ட போதும் அவர் கலந்து கொள்ளாததால், அவருக்கு கட்சியில் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லையென புதிய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
புதிய நிர்வாகம் தெரிவானதையடுத்து, அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் அலுவலகத்திற்கு சென்றனர்.
எனினும், அங்கு கட்சியின் பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, சட்டத்தரணி வீ.ஆனந்தசங்கரியின் அலுவலகம் என்ற புதிய பெயர்ப்பலகை பொருத்தப்பட்டுள்ளது. அலுவலகத்தை பூட்டி விட்டு, ஆனந்தசங்கரி உள்ளே இருந்து விட்டார்.
இந்த விவகாரங்கள் குறித்து வீ.ஆனந்தசங்கரியின் கருத்தை அறிவதற்காக தமிழ் பக்கம் அவரை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் அவர் பதிலளிக்கவில்லை.