பிரிட்டன், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறையை விரைவில் நீக்கவிருக்கிறது.
அடுத்த மாதம் 11 ஆம் திகதியிலிருந்து, ஒரு படிவத்தில் பயணிகள் தங்களின் தடுப்பூசித் தகுதியை உறுதி செய்தால் போதும்.
பெரும்பாலும் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளை இரண்டு முறை செலுத்திக் கொண்டவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாகக் கருதப்படுவர்.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் பயணத்துக்கு முன்னர் கொரோனாத்தொற்று இல்லை என்ற சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும், பிரிட்டன் சென்றதும் PCR பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
சீனா, மெக்சிகோ உள்ளிட்ட 16க்கு மேற்பட்ட நாடுகளின் தடுப்பூசிச் சான்றிதழ்களைப் பிரிட்டன் அங்கீகரிக்கிறது.
இதற்கிடையே, அங்கு புதிதாக 88,000 பேருக்குக் கொரோனாத்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை சற்றே அதிகரித்தாலும், சென்ற வாரத்துடன் ஒப்புநோக்க அது 7 விழுக்காடு குறைந்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர், உயிரிழப்போர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.