இந்த வருடத்தில் இதுவரை 5,000 டெங்கு நோயாளர்கள் நாட்டில் பதிவாகியுள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் வைத்தியர் இந்திக்க வீரசிங்க கருத்து தெரிவிக்கையில், கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்திலிருந்து டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், டிசெம்பர் மாதத்தில் இதன் உச்சநிலை பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் 9,000 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இந்த வருடம் ஜனவரி மாதத்தில் 5,106 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், அது ஒரு தொற்றுநோயாக மாறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களில் 50% க்கும் அதிகமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகுவதால், அங்குள்ள நிலைமை மிகவும் முக்கியமானது என்றார்.
இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக வைத்தியர் இந்திக வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில், கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஆறு சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசங்களும் டெங்கு அபாய பிரதேசங்களாக இனங்காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் (கொழும்பு) உள்ள 18 MOH பகுதிகளில் 16 இடங்கள் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கம்பஹா மாவட்டத்தில் உள்ள 16 MOH பிரதேசங்களில் 13 இடங்கள் அதிக ஆபத்துள்ள பகுதிகள் எனவும், கொழும்பு மற்றும் கம்பஹாவை விட களுத்துறை மாவட்டத்தின் நிலைமை சிறப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
எனினும் ஐந்து MOH பகுதிகளில் டெங்கு அபாயம் இருப்பதாக அவர் கூறினார்.
மேல் மாகாணத்திற்கு வெளியே நகர்ப்புறங்களைச் சூழ்ந்துள்ள பகுதிகளில் இலேசான தொற்றுநோய் நிலைமை காணப்படுவதாக குறிப்பிட்டார்.
காலி, பதுளை, யாழ்ப்பாணம், குருநாகல், கண்டி, புத்தளம் மற்றும் இரத்தினபுரி மாநகர சபைப் பகுதிகளைச் சூழவுள்ள பகுதிகளிலும் இதே நிலைமையை அவதானிக்க முடிகின்றது.