மட்டக்களப்பு விவசாயிகளின் பாதிப்பையும், பண்ணையாளர்களின் அவலத்தையும் உலகத்திற்கு எடுத்து காட்டும் நோக்கிலேயே இந்த வருட தமிழ்தேசிய கூட்டமைப்பு பொங்கல் விழாவை ஒரு துக்க நிகழ்வாக வெளிக்காட்டும் நோக்கில் அதை கருப்பு பொங்கல் நிகழ்வாகமட்டக்களப்பில் நடத்தினோம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பொங்கல் விழாவுக்கு ஏன் கருப்பு பொங்கல் என பெயரிடப்பட்டது என ஊடகவியலாளர் கேட்டபோது அதற்கு பதில் தரும் விதமாக மேலும் கூறுகையில்-
தற்போதைய அரசு பதவி ஏற்று தற்போது ஒரு வருடம் கடந்து இரண்டாவது வருடத்தை எட்டுகிறது. இந்த அரசு பதவி ஏற்ற காலம் தொடக்கம் இன்றுவரை மக்களின் வாழ்வு பல பிரச்சனைகளை சந்தித்துள்ளது. பொருளாதார நெருக்கடி, பொருட்களின் விலை ஏற்றம், தாய் சேய் நலனில் போசாக்கான பால்மா வாங்க முடியாத் திண்டாட்டம், எரிவாயு சிலின்டர்கள் இல்லை, அப்படி வாங்கினால் அது வெடித்து சிதறும் அபாயம், மின்சாரத் தடைகள், பாண் பருப்பு மா சீனி அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்முடியாத விலை ஏற்றம் அதைவிட குறித்த பொருட்களுக்கு தட்டுப்பாடு, ஏழைகளின் வயிற்றில் நெருப்பெரியும் நிலை போன்ற அவலங்களை பார்த்துக்கொண்டு ஒரு பொங்கல் விழாவை சிறப்பாக நடத்த முடியாது.
அதேவேளை பொங்கல் பண்டிகையை கைவிடவும் முடியாது. இல்ரங்களில் அவரவர் எப்படியோ பொங்கலை ஓரளவு சிறப்பாக கொண்டாடினாலும் ஒரு பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சி அதனை் சிறப்பாக வெளிக்காட்டமுடியாது என்பதை எமது மட்டக்கப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆராய்ந்து இதனை அரசாங்கத்திற்கு ஒரு எதிர்ப்பு நிகழ்வாகவும், துக்க நிகழ்வாகவும் வெளிக்காட்ட வேண்டும் என்ற முடிவை எடுத்தோம்.
துக்கத்துக்கான நிறம் கருப்பு, எதிர்ப்புக்கான நிறமும் கருப்பு என்பதால் கருப்பு ஆடைகளை முடிந்தவரை அணிவது எனவும் அந்த கருப்பு நிறத்தை மையப்படுத்தியே “கருப்பு பொங்கல்” என இம்முறை பெயரிட்டு, இது உழவர்களுக்கும் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் திருப்தி இல்லாத நிலையை அரசாங்கம் ஏற்படுத்திவிட்டது என்பதை வெளிக்காட்டப்பட்டது.
உண்மையில் ஏனைய மாவட்டங்களை விடவும் மட்டக்களப்பு மாவட்டம் நெல் உற்பத்திக்கு பெயர் போன ஒரு மாவட்டம். பெரும்போக நெற்செய்கையில் ஏக்கருக்கு நாற்பது மூடை தொடக்கம் அறுபது மூடைகளை விளச்சலாக பெற்ற விவசாயிகள் பலர் மட்டக்களப்பில் உள்ளனர்.
ஆனால் இந்த வருடம் சேதன உரம் பாவித்தமையால் ஒரு ஏக்கருக்கு பத்து மூடைகளை பெற முடியாத நிலை உள்ளது.
பொங்கலுக்காக மட்டுமல்ல வாழ்வாதாரத்திற்காகவும் பால் தரும் பசு, எருமை மாடுகள் ஏறக்குறைய மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றரை இலட்சம் உள்ளது. அந்த மாடுகளுக்கு மேய்ச்சல் தரைகளாக ஒதுக்கப்பட்ட மாதவனை, மயிலத்தமடு, கெவிளியாமடு பிரதேசங்களில் வெளிமாவட்டத்தை்சேர்ந்தவர்களை குடியேற்றி மாடுகளின் மேய்ச்சல் தரை அபகரிப்பு நடந்துள்ளது.
மட்டக்களப்பு மண்வளம் வெளிநாடுகளுக்கு ஆளும் தரப்பு அரசியல் வாதிகளின் துணையுடன் விற்கப்படுகிறது, வறுமை நிலையில் இலங்கையில் உள்ள மாவட்டமாக மட்டக்களப்பும் இனம் காணப்பட்டுள்ளது.
இவ்வாறான பெரும் அவலங்கள் ஏனைய மாவட்டங்களை விட மட்டக்களப்பில் மிக கூடுதலாக இடம்பெறுகிறது. இவைகளை தடுக்கவும் உண்மைகளை உலகம் உணரவும் இம்முறை கருப்பு பொங்கல் என அடையாளமிடப்பட்டு ஒரு எதிர்பு நிகழ்வாகவே இதனை செய்தோம்.
பேரணி, உண்ணாவிரதம், கடையடைப்பு, ஹர்த்தால், ஆர்ப்பாட்டம், கறுப்புபட்டி போராட்டம், மௌன ஊர்வலம், பகிஷ்கரிப்பு, பொங்குதமிழ், எழுகதமிழ், வீதிமறியல் போராட்டம், சத்தியாக்கிரகம் என பல வடிவங்களில் எதிர்புகளை காட்டிய தமிழ் தேசியஅரசியல் தலைமைகள் இந்த வருட பொங்கல் திருநாளை “கருப்பு பொங்கல்” என ஒரு கவன ஈர்ப்பு பொங்கல் நிகழ்வாக நடத்தியுள்ளோம்.
கருப்பு பொங்கல் என்ற பெயரே இன்று இலங்கை அரசாங்கத்திற்கு மட்டுமல்ல உலகத்திற்கும் ஒரு செய்தி சொல்லியுள்ளது. அது என்னவெனில் தமிழ்மக்கள் நிம்மதியற்று வாழ்கிறார், வருடாவருடம் தமிழர் திருநாளாக கொண்டாடிய தமிழ்தேசிய பொங்கல் விழா இம்முறை தற்போதைய அரசின் நிலைமையால் கறுப்பு பொங்கலாக எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளது. அதாவது அரசாங்கத்தின் சேதனப்பசளை என்ற குறளி வித்தை பயனில்லாத வித்தை என்பதை புரியவைத்துள்ளது என்பதே உண்மை எனவும் கூறினார்.