போதுமான எரிபொருள் வழங்கப்படாவிட்டால், இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தினால் வழங்கப்படும் கிட்டத்தட்ட 300 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின் உற்பத்தி கட்டமைப்பு இழக்க நேரிடும் என எரிசக்தி துறையுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால், இந்த பிரச்சினைக்கு அரசாங்கத்திடம் திட்டவட்டமான தீர்வு இல்லை என்றார்.
தேசிய மின் கட்டமைப்பிற்கு 160 மெகாவாட் மின்சாரம் வழங்கும் மின் நிலையத்தின் ஒரு யூனிட் ஃபர்னஸ் ஓயில் மற்றும் டீசல் பற்றாக்குறையால் நேற்றிரவு 10 மணிக்கு மூடப்பட்டதாக ஜெயலால் கூறினார்.
தற்சமயம் 140 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தேசிய மின் கட்டமைப்பிற்கு வழங்கப்படுகிறது என்றார்.
நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுவதால், அரசின் தீர்வுகள் பிரச்சினைகளாக மாறிவருகின்றன என்றார்.
இலங்கையின் அனல் மின் நிலைய அமைப்பை இந்தியா கையகப்படுத்த முயற்சிப்பதாக ஜெயலால் குற்றம் சாட்டினார்.
திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணையை இந்தியா ஏற்கனவே கைப்பற்றியுள்ளதாக அவர் கூறினார்.
தாம் நெருக்கடியில் உள்ளதாகக் கூறி இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை வழங்க முடியாது என லங்கா இந்தியன் ஒயில் கூட்டுத்தாபனம் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
அனல் மின் நிலையங்களை இந்தியாவுக்கு விற்கவும், இந்தியா நிர்ணயிக்கும் விலையில் மின்சாரத்தை வாங்கவும் அரசாங்கம் கட்டாயப்படுத்தப்படும் என்று ஜெயலால் கூறினார்.
மின் தட்டுப்பாடு மற்றும் கச்சா எண்ணெய் வாங்க முடியாததால் நாடு மின் நெருக்கடியை சந்தித்து வருகிறது என்றார்.
இந்தியா உண்மையில் நட்பு நாடாக இருந்தால், நெருக்கடியின் போது பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக மின்சாரம் தயாரிக்க கச்சா எண்ணெயை வழங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு இந்தியா உதவ வேண்டும் என்று ஜெயலால் கூறினார்.