சிம்பாவே அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றியீட்டியது. இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடி சிம்பாவே அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 296 ஓட்டங்களை பெற்றது. பதிலளித்தாடிய இலங்கை அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 300 ஓட்டங்களை பெற்றது.
கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகல் இரவு போட்டியாக இந்த ஆட்டம் இடம்பெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாவே முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
தகுத்ஸ்வனாஷே கைரானோ, ரெஜிஸ் சகப்வா ஜோடி 14.4 ஓவர்களில் முதல் விக்கெட்டிற்கு 80 ஓட்டங்களை பகிர்ந்து வலுவான அடித்தளம் அமைத்தது. 4ஆம் இலக்கத்தில் களமிறங்கிய ஷான் வில்லியம்ஸ் அதிரடியாக ஆடி தனது ஐந்தாவது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். எனினும், மற்றைய வீரர்கள் யாரும் சொல்லிக் கொள்ளும் விதமாக ஆடாததால், சிம்பாவேயை 296 ஓட்டங்களிலாவது கட்டுப்படுத்த முடிந்ததில் இலங்கை நிம்மதியடைந்திருக்கும்.
ஷான் வில்லியம்ஸ் 87 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 100 ஓட்டங்களை குவித்தார். தொடக்க வீரர்கள் தகுத்ஸ்வனாஷே கைரானோ 42, ரெஜிஸ் சகப்வா 72 ஓட்டங்களை பெற்றனர்.
பந்துவீச்சில் சமிக்க கருணாரத்ன 69 ஓட்டங்களிற்கு 3 விக்கெட், ஜெப்ரி வண்டர்சே 44 ஓட்டங்களிற்கு 2 விக்கெட், நுவான் பிரதீப் 54ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
பதிலளித்து ஆடிய இலங்கை ஆரம்பத்திலிருந்தே அமர்களப்படுத்தியது.
தொடக்க வீரர் பதும் நிசங்க 71 பந்துகளில் 75 ஓட்டங்கள், சந்திமல் 91 பந்துகளில் 75, சரித் அசலங்க 68 பந்துகளில் 71 ஓட்டங்களை பெற்றனர்.
இலங்கை 48.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 300 ஓட்டங்களை பெற்று, 5 விக்கெட்டினால் வெற்றியீட்டியது.
பந்துவீச்சில் ரிச்சர்ட் ங்கரவா 56 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டை வீழ்த்தினார்.
ஆட்டநாயகன் தினேஷ் சந்திமல்.
இந்த வெற்றியின் மூலம் ஐசிசி சுப்பர்லீக் தொடரின் புள்ளிப்பட்டியலில் இலங்கை 10 புள்ளிகளை பெற்று, 5ஆம் இடத்திற்கு முன்னேறியது. எனினும், இலங்கை தனக்கான 22 போட்டிகளில் 16 போட்டிகளில் ஆடியே இந்த இடத்தை பெற்றுள்ளது. ஏனைய பல அணிகள் இதுவரை குறைவான போட்டிகளிலேயே இதுவரை ஆடியுள்ளதால், இலங்கை புள்ளிப்பட்டியலில் முதல் 8 இடங்களில் நீடிக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை.




