மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் பிரதேச சபையின் தலைவராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் எஸ்.எச்.எம்.முஜாகிர் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு கடந்த 2 தடவைகள் தோற்கடிக்கப்பட்டது.
கடந்த இரண்டு தடவைகள் பாதீடு தோற்கடிக்கப்பட்ட நிலையில்,புதிய தவிசாளர் தெரிவு இடம் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இன்று புதன்கிழமை(12) காலை 10.30 மணியளவில் மன்னார் பிரதேச சபையில் வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் புதிய தவிசாளருக்கான தெரிவு இடம்பெற்றது.
இதன் போது புதிய தவிசாளர் தெரிவிற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான எம்.ஐ.எம். இஸ்ஸதீன் என்பவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
எனினும் தவிசாளர் தெரிவிற்கு வேறு எந்த உறுப்பினர்களுடைய பெயரும் பரிந்துரைக்கப்படவில்லை.
இந்த நிலையில் மன்னார் பிரதேச சபையின் 21 உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் புதிய தவிசாளராக போட்டியின்றி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான எம்.ஐ.எம். இஸ்ஸதீன் மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் 7 உறுப்பினர்களும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பொது ஜன பெரமுன, சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவை பூரண ஆதரவை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.