தற்போதைய நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் தொடர்பில் அதிருப்தியடைந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ அல்லது வேறு எந்த அணியினரோ அரசாங்கத்தை விட்டு வெளியேற முடியும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார்.
பொது மேடைகளில் அரசை விமர்சிக்காமல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது முடிவை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவிப்பதன் மூலம் அரசாங்கத்தில் இருந்து வெளியேற முடியும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறது என்றும் அது கூட்டுப் பொறுப்பிற்குக் கட்டுப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
வாக்குறுதிகளை நிறைவேற்றவும், வளர்ச்சியை முன்னெடுப்பதற்காகவும் கடந்த தேர்தலில் ஒட்டுமொத்த கூட்டணிக்கு பொதுமக்கள் வாக்களித்தனர் என்றார்.
எனவே அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்குமாறும் அல்லது தலைமைக்கு அறிவித்து கூட்டணியை விட்டு வெளியேறுமாறும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கூட்டணி உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தலை சந்திக்க அரசாங்கம் பயப்படவில்லை என்றும் அவர் கூறினார்.