எம்மிடையே போதிய அரசியல் தலைவர்கள் இல்லாமையினால்த்தான் தேசியக் கட்சிகளையும் ஜே.வீ.பி போன்ற கட்சிகளையும் மக்கள் வரவேற்றனர். வடக்கில் இது தொடர்ந்தும் நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியாது. தேசியக் கட்சிகள் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுத் தருவதாக வாக்களித்தவற்றை தற்போது தர முடியாமல் திண்டாடுகின்றனர் என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன்.
இன்று அவர் செய்தியார்களிடம் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார்.
அவர் கேள்விகளிற்கு அளித்த பதில்கள் வருமாறு-
01. கேள்வி :- தமிழ் மக்கள் கூட்டணி கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் பயணம் எவ்வாறாக இருக்கப்போகின்றது? மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது இருந்திருந்தது. அத்தகைய எதிர்பார்ப்பை கட்சி நிறைவேற்றியுள்ளதா?
பதில் :- எங்கள் கட்சியின் அங்குரார்ப்பணக் கூட்டம் 2019 ஜனவரி மாதம் 20ந் திகதி நடந்தது. தற்போது மூன்று வருடங்கள் ஆகின்றன. இந்தக் குறுகிய காலத்தினுள் எமது கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளமை, எமக்கு ஒரு மனோ வேகத்தைக் கொடுத்துள்ளது. அந்த வேகத்தைப் பாவித்து எதிர்காலத்தில் மும்முரமாக வேலை செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
இன்று எங்களது கட்சி இளைஞர்கள் சிலரின் கூட்டம் நடைபெறுகின்றது. என்னால் தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, மற்றவற்றுள் இளைஞர் யுவதிகளை அரசியல் ரீதியாக முன்னால் கொண்டுவரவும் உருவாக்கப்பட்டது. 80 வயதின் பின்னர் கட்சியொன்றைத் தொடங்கி அதன் சார்பில் பாராளுமன்றம் ஏறியவர்கள் இதற்கு முன் வேறொருவரும் இல்லை என்று சில காலத்திற்கு முன்னர் யாரோ சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் என்னிடம் கூறி எனக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டார். அது உண்மையோ எனக்குத் தெரியாது. ஆனால் எனது வாழ் காலம் இன்னும் நீண்ட ஒன்றாக இருக்கப் போவதில்லை. எனவே தான் தகுந்த இளைஞர் யுவதிகளை அடையாளம் கண்டு அவர்களை முன்னேற்ற நான் அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கின்றேன்.
தற்கால இளைஞர் யுவதிகள் பலர் திடீர் என்று தாங்கள் தலைவர்களாக வரவேண்டும் என்று எண்ணுகின்றார்கள். திடீர் அரசியல் பணக்காரர்களாக மாற ஆசைப்படுகின்றார்கள். நேர்மையையும் கடினமான உழைப்பையும் அணிகலன்களாகக் கொண்டு சுயநலம் களைந்து மக்கள் சேவையில் இறங்கப் பிரியப்படும் இளைஞர் யுவதிகள் மிகக் குறைவு. ஆகவே எமது அடுத்த கட்டம் தன்னலம் கருதாத இளைஞர் யுவதிகளை எம்முடன் சேர்த்து அவர்களை அரசியலில் முன்னேற்றும் நடவடிக்கையாகவே அமையும்.
நாம் எம் கட்சியை தொடங்கிய போது பலத்த எதிர்பார்ப்பு இருந்தது உண்மை தான். ஆனால் எங்களால் படிப்படியாக இயற்கையாக வளர முடியவில்லை. கட்சியை அங்குரார்ப்பணம் செய்து சில மாதங்களுக்குள் கொரோனா பற்றிய பயம் தொடங்கிவிட்டது. எமக்கென அடிமட்ட உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது சிரமமாகப் போய்விட்டது. இவற்றையெல்லாம் விட்டஇடத்தில் இருந்து தொடர விரும்புகின்றோம்.
மேலதிகமாக நாங்கள் மக்களின் நாளாந்த தேவைகள் பற்றி கவனம் செலுத்த உள்ளோம். வீட்டுத் தோட்டங்கள் அமைத்தல், காளான் வளர்த்தல், தேனி வளர்த்தல் போன்ற பலவற்றை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். தேவையானவர்களுக்கு ஆடுää கோழி போன்றவற்றை வாங்கிக் கொடுத்து அவர்களிடம் இருந்து சில நன்மைகளைப் பெற செயற்றிட்டங்கள் வகுத்துள்ளோம்.
அரசியல், பொருளாதாரம், சமூகவியல் போன்றவற்றைப் பற்றிய வகுப்புகள் நடத்தவுள்ளோம். அரசியலில் சுயநலம் புகுந்ததால் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமை பற்றியும், பொருளாதாரத்தில் தம்மைத் தாமே நாடி தற்சார்பு நடவடிக்கைகளில் இறங்கி குடும்பங்கள் தன்னிறைவு பெற என்ன செய்யலாம் என்பது பற்றியும், சமூக ரீதியாக எவ்வாறு போதைப் பொருள் பாவனையையும் வாள்வெட்டு கலாசாரத்தையும் நிறுத்தலாம் என்பது பற்றியும் மக்களுக்கு உணர்த்தி பொதுவான விளிப்புணர்வை ஏற்படுத்த இருக்கின்றோம்.
அதே நேரத்தில் எமது கட்சியை அடிமட்டத்தில் வலுப்பெற நடவடிக்கைகள் எடுக்கவுள்ளோம். ஆகவே வரும் நாட்கள் எமது கட்சியினருக்கு மிகவும் சுறுசுறுப்பான நாட்களாக அமையப் போகின்றன.
02. கேள்வி :- 13வது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்தக் கோரி கடிதம் எழுதியாயிற்று. வடமாகாணசபையின் முதலாவது முதலமைச்சராக இருந்துள்ளீர்கள். அத்தகைய கடிதம் தேவையானதா? இந்திய -இலங்கை நிகழ்ச்சி நிரலில் தான் 13 இனை அமுல்படுத்த கோரும் முயற்சி நடந்ததாக குற்றஞ்சாட்டப்படுகின்றதே?
பதில் :- கடிதம் தேவையானது. வடகிழக்கு தமிழ்ப் பேசும் மக்களின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றது. காணிகள் பறிபோகின்றன. சிங்களக் குடியேற்றங்கள் அதிகமாகி வருகின்றன. வடகிழக்கின் தொடர்ச்சியானது இல்லாமல் செய்யப்பட்டு வருகின்றது. படையினர் பிரசன்னங்கள் கூடி வருகின்றன. சிங்கள அலுவலர்கள் அதிகளவில் இங்கு இருக்கும் திணைக்களங்களுக்கு வர ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
யாழ் பல்கலைக்கழகம் பிற மாவட்ட மாணவ மாணவியர் அதிகமாகப் பயிலும் நிறுவனமாக மாறி வருகின்றது. மொத்தத்தில் வடகிழக்கு மாகாண சனப்பரம்பல் மாறிக் கொண்டு வருகின்றன. இதற்கு ஒரு தடையாகவே நாம் கடிதம் எழுதி அனுப்புகின்றோம்.
இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் சேர்ந்து தற்போது அரசியல் யாப்பில் இருக்கும் 13வது திருத்தச் சட்டத்தை முற்றாக அமுல்படுத்துவதாக இருந்தால் அதைச் செய்யட்டும். எமது நிரந்தரத் தீர்வுகளை சர்வதேச ரீதியாகப் பெற நாம் நடவடிக்கைகள் எடுப்போம்.
ஒற்றையாட்சியின் கீழான 13வது திருத்தச்சட்டத்திற்கும் எமது நிரந்தரத் தீர்வுக்கும் இடையில் சம்பந்தம் இல்லை.
03. கேள்வி :- வடகிழக்கில் தேசியக்கட்சிகள் ஜேவிபி உள்ளிட்டவை தமது அரசியலை முடுக்கிவிட்டுள்ள நிலையில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் உறக்க நிலையில் இருப்பதாக குற்றஞ்சுமத்தப்படுகின்றதே?
பதில் :- தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் சேர்ந்து ஒற்றுமையாக இயங்காத வரையில் இவ்வாறான நடவடிக்கைகள் கிழக்கில் நடைபெறுவன. கிழக்கு மாகாணத்திற்கு தமிழ் அரசியல்வாதிகளை விட தமிழ் அரசியல் தலைவர்களே வேண்டியுள்ளனர். கிழக்கு மாகாணப் பிரச்சனைகள் வடமாகாணப் பிரச்சனைகள் போன்றவையல்ல. அவை மாறுபட்டவை. நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் இருந்த சனப் பரம்பல் அல்ல தற்போது அங்கு இருப்பது. இதனால் இனங்களுக்கிடையில் முறுகல் நிலை வளர்ந்துள்ளது. உரியவாறு சிந்தித்துச் செயலாற்றும் அரசியல் தலைவர்கள் எல்லா இனங்களுக்கிடையேயும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டால் அன்றி இன முறுகல் நிலை தொடரவே செய்யும்.
எம்மிடையே போதிய அரசியல் தலைவர்கள் இல்லாமையினால்த்தான் தேசியக் கட்சிகளையும் ஜே.வீ.பி போன்ற கட்சிகளையும் மக்கள் வரவேற்றனர். வடக்கில் இது தொடர்ந்தும் நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியாது. தேசியக் கட்சிகள் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுத் தருவதாக வாக்களித்தவற்றை தற்போது தர முடியாமல் திண்டாடுகின்றனர்.
எனினும் வட கிழக்கை சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றதை நாம் மறத்தலாகாது. தமிழ், முஸ்லீம்; அரசியல் தலைவர்கள் சேர்ந்தால் மற்றும் எமது தமிழ்த் தேசியக் கட்சிகள் பொது நிகழ்ச்சிநிரல் ஒன்றில் சேர்ந்தால் தேசியக் கட்சிகளும் ஜே.வீ.பீ யும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடுவன.
04. கேள்வி :- யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை உங்கள் கட்சியுடன் இணைய அழைப்பு விடுத்துள்ளீர்கள். அத்தகைய முயற்சிகள் ஏதும் முன்னெடுக்கப்பட்டுள்ளதா?
பதில் :- இல்லை. பேட்டியொன்றில் கேட்ட கேள்விக்கு திரு.மணிவண்ணனுக்கு எம்முடன் சேர விருப்பமிருந்தால் சேருமாறு என்னைப் பேட்டி கண்டவர்களை அவருக்கு அறிவிக்கக் கோரினேன். அவருடன் எந்தப் பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை. அவரை ஓரிரு முறைகள் தான் நான் சந்தித்துள்ளேன். அவரின் சகோதரர் என் முன் நீதிமன்றில் சமூகமளித்திருக்கக்கூடும்.
05. கேள்வி :- தெற்கில் மட்டுமல்ல வடகிழக்கிலும் மக்கள் பொருளாதார நெருக்கடியினுள் சிக்குண்டுள்ளனர். ஆனால் தமிழ் தரப்புக்கள் இதனைப் பற்றி பெரிதாக கண்டுகொள்வதாக தெரியவில்லையே?
பதில் :- தமிழ் மக்களிடையே நாங்கள் இதுகாறும் அரசியல்வாதிகளையே வளர்த்து வந்துள்ளோம். அவர்கள் அடுத்த தேர்தலை ஒட்டியே தமது சிந்தனைகளை ஓடவிட்டுக் கொண்டிருப்பார்கள். தொடர்ந்து பதவியில் இருக்கவே அவர்கள் முழுமனதுடன் எத்தனிப்பார்கள். மக்களின் நெருக்கடிகளும் பிரச்சனைகளும் அவர்களுக்கு இரண்டாம் கட்டமே. அதுவும் மக்களின் நெருக்கடிகளைத் தீர்த்தால் தமக்கு தேர்தலில் என்ன நன்மை கிடைக்கும் என்றே பார்ப்பார்கள்.
நாங்கள் இரு வருடங்களுக்கு முன்னர் இருந்தே எமது தற்சார்புää தன்னிறைவு கருத்துக்களை மக்களிடையே பரப்பி வந்துள்ளோம். இப்பொழுதும் மக்கள் பட்டினி இருக்காமல் என்னென்ன செயல்களில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றோம். ஒரு வேளை எமது தமிழ்த் தரப்புக்கள் “வந்தபின் காக்கும்” இரகத்தைச் சேர்ந்தவர்களோ தெரியாது. நாம் “வரமுன் காக்க” எத்தனித்து வருகின்றோம்.