வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் பல நூறு ஏக்கர் காடு அழிப்பு வேலைகள் நடைபெறுவதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் நேற்று (11) கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவில் தொடர்ந்து காடுகளை அழித்து காணி அபகரிப்பு வேலைகள் நடைபெறுவதாக கடந்த சில மாதங்களாக எனக்கு பல்வேறு நபர்களால் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.
அதற்கமைவாக, எவருக்கும் அறிவிக்காமல் சின்னசிப்பிக்குளம் கிராம சேவையாளர் பிரிவிற்கு நான் இன்று திடீர் விஜயம் மேற்கொண்டேன். அங்கு பிரதேச செயலாளரின் 2 ஹெக்டெயருக்கான அனுமதி கடிதத்துடன் 100 ஏக்கருக்கு மேல் காடழிப்பு நடைபெற்றுக்கொண்டிருப்பதை அவதானித்து உடனடியாக தடுத்து நிறுத்தினேன்.
வவுனியா மாவட்ட செயலாளர், வனவள திணைக்களத்தினர் ஆகியோருக்கு தகவலையும் வீடியோ ஆதாரத்தையும் வழங்கியுள்ளேன். சாதாரண மக்கள் ஒரு சிறு தடியை வெட்டினால் கூட வனவள திணைக்களத்தினர் வழக்கு போடும் நிலையில் இப்படியான செயற்பாடு எப்படி நடைபெற்றது?. அதேபோல், பிரதேச செயலாளரின் அனுமதி கடிதம் வழங்கிய பின் அவ்விடத்திற்கு கிராம சேவையாளர் கூட சென்று பார்க்காமல் இருந்தது ஏன்?, பிரதேச செயலாளர் வழங்கிய கடிதத்தில் பொலிசாருக்கு பிரதி போட்டிருந்தும் ஏன் பொலிசார் செல்லவில்லை? என பொதுமக்கள் என்னிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதேபோன்று, மேலும் பல ஏக்கர் காணிகள் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் வந்துள்ளன. கிடைக்கப்பெற்ற அனைத்து முறைப்பாடுகளுக்கும் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட செயலாளருக்கு பணித்துள்ளேன்.
ஜனாதிபதி அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் காடுகளின் சதவீதத்தை 30 ஆக உயர்த்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் சில அரச அதிகாரிகளின் துணையுடன் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவது அரசாங்கத்தின் அபிவிருத்தி மற்றும் நாட்டு நலன் கருத்திய திட்டங்களை கேள்விக்குட்படுத்தியுள்ளது. எனவே இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அமைச்சு மற்றும் அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதுடன், அரசாங்கதத்தின் மக்கள் நலன் கருதிய திட்டங்களை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்தார்.