புதிய யுகம் நோக்கி பயணிக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.
வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு வருகின்றார்.
இந்த நிலையில் இன்றைய தினம் கரவெட்டியில் கட்சியின் உடுப்பிட்டி தொகுதி அமைப்பாளர் அகிலதாசின் ஏற்பாட்டில் தைப்பொங்கலுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் சக்தியானது எதிர்க்கட்சியாக இருந்து கொண்டும் அரசியலில் மட்டும் கவனம் செலுத்தாது மக்களின் சுகாதாரம் கல்வி போன்ற விடயங்களிலும் அவதானம் செலுத்தி வருகின்றது.
குறிப்பாக நாடு முழுவதிலும் உள்ள பின்தங்கிய வைத்தியசாலைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கி வைத்துள்ளதோடு பாடசாலைகளுக்கு தேவையான நவீன கல்வி பயிலும் உபகரணங்களையும் வழங்கி வருகின்றோம்.
இவ்வாறான சேவையினை வழங்குவதையிட்டு பெருமையடைகின்றேன். ஏனென்றால் எந்த ஒரு எதிர்க்கட்சியும் இவ்வாறு செயற்பட்டது கிடையாது. குறிப்பாக எதிர்க்கட்சியாக உள்ளவர்கள் அரசியலில் மட்டும் கவனம் செலுத்துவார்கள். நாங்கள் ஒரு புதிய கட்சி. ஆனால் நாங்கள் புதிய யுகத்திற்கான பயணத்தை நோக்கி பயணிக்கிறோம்.
தற்போது மக்கள் அரசாங்கத்தை வெறுக்கின்றார்கள். ஏன் இவர்களுக்கு வாக்களித்தோம் என்று எண்ணும் அளவிற்கு நிலைமை காணப்படுகின்றது.
ஆனால் நாங்கள் எல்லாவற்றையும் உற்றுநோக்கி செயற்படுகின்றோம். எனவே அனைத்து மக்களும் எமது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் புதிய யுகத்தை நோக்கி பயணிக்க முடியும் என்றார்.