கஸகஸ்தான் குழப்பங்களையடுத்து ரஷ்யா அங்கு படைகளை அனுப்பியது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அன்ட்டனி பிளிங்கன் முன்வைத்த கருத்து சர்ச்சையாகியுள்ளது. அவரது கருத்தைதை ரஷ்யா சாடியுள்ளது.
ரஷ்யர்கள் வீட்டிற்குள் வந்தால் அவர்களை வெளியேற வைப்பது சில சமயங்களில் மிகவும் கடினம் என்று பிளிங்கன் கூறியிருந்தார்.
நாட்டில் நிலவும் கலவரம் முடிந்தபிறகு ரஷ்யத் துருப்புகளை வெளியேற்றுவதில் கஸகஸ்தானிற்குச் சிரமம் ஏற்படக்கூடும் என்பதைக் குறிப்பிடும் வகையில் அவர் அவ்வாறு கூறினார்.
பிளிங்கனின் கருத்து புண்படுத்தும் வகையில் இருந்ததாக ரஷ்ய வெளியுறவு அமைச்சு கூறியது.
கஸகஸ்தானில் நடைபெறும் சோகமான நிகழ்வுகளை அவர் கேலிசெய்வதாகவும் அமைச்சு குற்றஞ்சாட்டியது.
கஸகஸ்தானில் சுமார் ஒரு வாரமாக நீடிக்கும் வன்முறை நிறைந்த போராட்டங்களால் பலர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஸகஸ்தான் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க அந்நாட்டிற்கு ரஷ்யா தொடர்ந்து துருப்புகளை அனுப்பிவருவது குறிப்பிடத்தக்கது.