26.3 C
Jaffna
January 11, 2025
Pagetamil
இந்தியா

பெப்ரவரி 10 முதல் 5 மாநிலங்களில் 7 கட்டங்களாகத் தேர்தல்: மார்ச் 10இல் வாக்கு எண்ணிக்கை

பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. உ.பி.யில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.

5 மாநிலங்களுக்கு நடக்கும் தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியும், பஞ்சாப்பில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியும் நடக்கிறது. 5 மாநிலத் தேர்தலில் பஞ்சாப், உ.பி. தேர்தலைத்தான் அரசியல் பார்வையாளர்கள் பலரும் உற்றுநோக்கி வருகின்றனர்.

நாட்டில் கொரோனா 3வது அலை பரவி வரும் நிலையில் 5 மாநிலத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் நடத்துவது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், மாநிலங்களின் தேர்தல் ஆணையர்கள் ஆகியோருடன் தலைமைத் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி முடித்துவிட்டது.

தேர்தல் பிரச்சாரங்களையும் நேரடியாக நடத்தாமல் காணொலி மூலம் நடத்துவது, கூட்டங்களைக் காணொலி மூலம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை, வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா உள்ளிட்ட தேர்தல் ஆணையர்கள் நிருபர்களுக்கு இன்று பேட்டியளித்தனர்.

அப்போது சுஷில் சந்திரா கூறியதாவது:

”5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலும் 7 கட்டங்களாக நடத்தப்படும். உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும். பெப்ரவரி 10ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை நடக்கும்.

உத்தரகாண்ட் மற்றும் கோவா மாநிலங்களில் பெப்ரவரி 14ஆம் தேதியும், மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு பெப்ரவரி 27 மற்றும் மார்ச் 3ஆம் திகதியும் நடக்கும். வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் திகதி நடக்கும்.

1. ஒட்டுமொத்தமாக 5 மாநிலங்களிலும் சேர்த்து 18.34 கோடி வாக்காளர்கள் 8.55 கோடி பெண் வாக்காளர்கள்.

2. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் குறைந்தபட்சம் ஒரு வாக்குப்பதிவு மையம் முற்றிலும் பெண்களால் நிர்வகிக்கப்படும் வகையில் அமைக்கப்படுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதற்குரிய வாக்குபதிவு மையங்கள் அடையாளம் காணப்படும். மொத்தம் 5 மாநிலங்களிலும் சேர்த்து 690 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதற்காக 1,620 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படும்.

3. கரோனாவால் பாதிக்கப்பட்டோர், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தபால் மூலம் வாக்குகளைப் பதிவு செய்யலாம்.

4. இவிஎம் மற்றும் விவிபிஏடி எந்திரங்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்த வேண்டும். போதுமான அளவு எந்திரங்கள் கிடைப்பதையும், சிக்கலும் இல்லாமல் தேர்தல் நடத்தவும் தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

5. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களைத் தேர்வு செய்த 48 மணி நேரத்துக்குள் அந்த வேட்பாளர் குறித்த விவரங்கள், அவர் மீது நிலுவையில் இருக்கும் கிரிமினல் வழக்குகள், ஏன் இந்த வேட்பாளரைத் தேர்வு செய்தோம், கிரிமினல் வழக்கு இருந்து தேர்வு செய்யப்பட காரணம் என்ன, வழக்கு இல்லாத மற்றவர்களை ஏன் வேட்பாளராகத் தேர்வு செய்யவில்லை என்பதற்கான விளக்கத்தை அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும். அரசியல் கட்சியின் இணையதளத்தின் முகப்பில் இந்த விவரங்கள் இடம் பெற வேண்டும்.

6. தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வரும். தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்திருக்கிறது. விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

7. தேர்தல் ஆணையத்தின் cVIGIL செயலியை வாக்காளர்கள் பயன்படுத்தி, அதன் மூலம் எந்த இடத்திலாவது தேர்தல் விதிமுறை நடந்தால் தகவல் தெரிவிக்கலாம். வாக்காளர்களுக்குப் பணம் வழங்குதல், இலவசப் பொருட்கள் வழங்குதலையும் தெரிவிக்கலாம். புகார் செய்யப்பட்ட 100 நிமிடங்களில் அந்த இடத்துக்குத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்று விசாரணை நடத்துவார்கள்.

8. தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள். அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், தேவைப்படுவோர் பூஸ்டர் டோஸ் செலுத்தியிருக்க வேண்டும்.

9. தேர்தல் நடக்கும் இந்த 5 மாநிலங்களில் 15 கோடி மக்கள் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

10. தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து வேட்பாளர்களும், வாக்களார்களும், மக்களின் உடல்நலன், கரோனா காலம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

11. அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் பிரச்சாரங்களைக் காணொலி மூலமே செய்ய வேண்டும். அதற்கான விரிவான வழிகாட்டல்கள் வெளியிடப்படும்.

12. அரசியல் கட்சிகள் சாலையில் ஊர்வலம் செல்லுதல், பாத யாத்திரை செல்லுதல், சைக்கிள் ஊர்வலம் ஆகியவற்றை ஜனவரி 15-ம் தேதிவரை நடத்தக் கூடாது. அதன்பின் சூழலை ஆய்வு செய்தபின் அடுத்த அறிவிப்பு வெளியாகும்.

13. வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது, வெற்றிக் கொண்டாட்டம் கூடாது.

14. வேட்புமனுவை வேட்பாளர்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமும் தாக்கல் செய்யலாம்.

15. அரசியல் கூட்டங்களின் போது அரசியல் கட்சிகள் சானிடைசர், முகக்கவசங்களை வழங்கிட வேண்டும்.

16. வாக்காளர்கள் வீட்டுக்கு வீடு சென்று வாக்குச் சேகரிக்கும்போது வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும்.

17. வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது மதரீதியான, இனரீதியான, தூண்டிவிடும் வகையில் வெறுப்புப் பேச்சு பேசுதல் கூடாது. அவ்வாறு செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”.

இவ்வாறு சுசில் சந்திரா தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விடுதலைக்காக சொத்தை விற்றவர் வஉசி; சொத்துக்காக திருமணம் செய்தவர் பெரியார் – சீமான் ஆவேசம்

Pagetamil

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் குழுவின் தலைவன் கைது!

Pagetamil

திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அசத்தல் சாதனை

east tamil

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்

Pagetamil

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் நோட்டீஸ்

Pagetamil

Leave a Comment