பூமியில் நச்சு கலக்க முயன்ற சீனாவின் உரக்கப்பலுக்கு நட்டஈடு செலுத்தும் அரசாங்கம், விவசாயிகளிற்கு நட்டஈடு தர மாட்டேன் என்பது எந்த வகையில் நியாயமென பொலன்னறுவை விவசாயிகள் அமைப்பு அமைச்சர் மஹிந்தானந்தவிடம் கேள்வியெழுப்பியுள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
பொலன்னறுவையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பொலன்னறுவை பராக்கிரம சமுத்திர அளுத்வெவ கிழக்கு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.கே.டி.விஜேரத்ன –
“பூமிக்கு விஷம் கலந்த சீன உரக் கப்பலுக்கு இழப்பீடு வழங்க அரசு தயாராக உள்ளது. இந்த இழப்பீட்டை இந்நாட்டு மக்கள் செலுத்துகிறார்கள். விவசாய அமைச்சர் இந்த நாட்டில் விவசாய சமூகத்தின் அவலத்துடன் விளையாடுகிறார். உரங்கள் மற்றும் நைட்ரஜன் இல்லாமல், பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறும். இந்தப் பயிரில் முன்பு கிடைத்த விளைச்சலைப் பெற முடியாது. அது மிகவும் தெளிவாக உள்ளது. எனவே, விவசாய அமைச்சருக்கு நாம் கூறுகின்றோம், பொய்யான தற்பெருமைகள் வேண்டாம். நெல் விவசாயத்தினால் இவ் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்திற்கு நியாயமான நட்டஈட்டை நாளை வழங்க தயாராக இருங்கள். அந்த இழப்பீட்டைப் பெற அனைத்து விவசாயிகள் அமைப்புகளையும் அனைத்து விவசாயிகள் சமூகங்களையும் ஒரே இடத்தில் ஒன்றிணைப்போம். நீங்கள் பணம் செலுத்தவில்லை என்றால், நாங்கள் உங்களிடம் வருவோம். அந்நாளில் உங்கள் வீடுகள் விவசாயிகளால் சூழப்படும்.
மகாவலி சி. பிராந்திய விவசாய குழு உறுப்பினரும் சந்துன்புர விவசாயிகள் சங்கத்தின் தலைவருமான ஜயந்த ரந்தெனிய தெரிவிக்கையில்-
“எங்கள் மகாவலி பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் மற்ற பருவங்களில் ஒரு ஹெக்டேருக்கு 4,500 முதல் 5,000 கிலோ வரை நெல்லைக் உற்பத்தி செய்தனர். ஆனால் இம்முறை அதில் பாதி தொகையையாவது பெற முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உரம் இல்லாததே இதற்குக் காரணம். பயிர்களிற்கு தேவையான சத்துக்கள் பற்றாக்குறையே காரணம்.
இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதை தனியாரிடம் அரசு கொடுத்தது. அப்போது ரூ.1500 ஆக இருந்த உர மூட்டை இன்று ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.
உரங்கள், பூச்சிக்கொல்லிகள், விவசாய இரசாயனங்கள் இன்று ஒரு மோசடியாக மாறிவிட்டது. விவசாயத்தை அப்புறப்படுத்தும் சதி நடப்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது என்றார்.