ஆபாசமான பிரசுரங்களை பிரசுரிப்பதை தடுக்கும் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு நீதி அமைச்சர் அலி சப்ரி, அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி உண்மைக்கு புறம்பான தகவல்களை, ஆபாச பிரசுரங்களை தடை செய்யும் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதுடன், சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் இது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
ஆபாசமான பிரசுரங்களை தடை செய்வதற்கான சட்டத்தை உருவாக்கும் போது, பதிப்புரிமைக்கு ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று சில தரப்பினர் கூறுகின்றனர்.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.மாயாதுன்ன, திருத்தப்பட்ட சட்டமூலத்தை மீண்டும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்குமாறும், தற்போதுள்ள வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் அலி சப்ரி பணிப்புரை விடுத்துள்ளார்.
ஆபாசமான பிரசுரங்களைத் தடை செய்வதற்கான சட்டத்தை இயற்றியதன் நோக்கம் சிறார்களின் நலன் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் பெண்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதே தவிர, பேச்சு சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிப்பதல்ல என குறிப்பிட்டுள்ளார்.