29.7 C
Jaffna
June 28, 2022
ஆன்மிகம்

மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிகளுக்கு 2022ஆம் ஆண்டுக்கான ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்களை ஜோதிடமணி எஸ்.எம்.பஞ்சாட்சரம் கணித்து வழங்கியுள்ளார்.

மேஷம்

01.01.2022 முதல் 30.06.2022 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் மனதில் இருந்து வந்த கவலைகள் பறந்து விடும். செய்தொழிலில் ஏற்றத்தைக் காண்பீர்கள். பொருளாதார மேன்மையினால் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உற்றார் உறவினர்கள், நண்பர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். அவர்களின் உதவியினால் புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள். குடும்பத்துடன் மனதிற்கினிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.

சமுதாயத்தில் உங்கள் பெயர், புகழ் கூடத் தொடங்கும். பிரபலமானவர்களின் நட்பு கிடைத்து அவர்களாலும் உதவிகளைப் பெறுவீர்கள். செய்தொழிலில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவீர்கள். தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். சிலர் வண்டி வாகனங்களை வாங்குவார்கள். நிலுவையில் இருந்த வழக்குகளிலும் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். குழந்தைகளையும் வெளியூர், வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். முக்கியமான தருணங்களில் உங்கள் பழைய அனுபவம் கை கொடுக்கும் காலகட்டமாக இது அமைகிறது.

01.07.2022 முதல் 31.12.2022 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் சிறிய சிரமங்கள் ஏற்பட்டாலும் உங்கள் கடின உழைப்பால் அவைகளைச் சமாளித்துவிடுவீர்கள். எதிர்பார்த்த வாய்ப்புகள் தட்டிப் போனாலும் புதிய வாய்ப்புகளைப் பெற்று ஈடு செய்து விடுவீர்கள். நீங்கள் ஈடுபட்டுள்ள துறையில் அனுபவஸ்தர்களின் ஆலோசனை தக்க நேரத்தில் கிடைத்து, அதனால் சரியான முடிவுகளை எடுப்பீர்கள்.

உடன்பிறந்தோரிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து விடும். உங்கள் செயல்களைச் சரியாக செய்து முடிக்க தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களையும் சரியாக கண்காணிப்பீர்கள். அவர்களின் தவறுகளைப் பக்குவமாகத் திருத்துவீர்கள். புதிய கடன் வாங்கும் சூழ்நிலை எதுவும் ஏற்படாது. தேவைக்கேற்ற வருமானத்தையும் காண்பீர்கள். செய்தொழிலில் இருந்த போட்டி, பொறாமைகள் படிப்படியாக குறையத் தொடங்கும்.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளைக் கருத்துடன் செய்து நற்பெயர் எடுப்பார்கள். மேலதிகாரிகள் தேவையான ஆதரவை நல்குவார்கள். அலுவலகத்தில் உங்கள் பெயர் புகழ் உயரத் தொடங்கும். பயணங்களால் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். கனிவான பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் திறமையுடனும், சமயோஜித புத்தியுடனும் நடந்து கொள்வீர்கள். சமுதாயத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். நண்பர்களை அரவணைத்துச் செல்வீர்கள். போட்டிகளுக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயித்து லாபத்தைப் பெருக்கும் ஆண்டாக இது அமைகிறது.

விவசாயிகள் புதிய பயிர்களைப் பயிரிடுவார்கள். பாசன வசதிகளை மேற்கொள்வார்கள். சிவப்பு நிறப் பயிர்களால் சற்று கூடுதல் வருமானம் கிடைக்கும். விவசாயப் பணிகள் அனைத்தும் உங்கள் கண்காணிப்பிலேயே இருக்கட்டும்.

அரசியல்வாதிகள் அனைவருக்கும் உதவி செய்து மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவார்கள். தொண்டர்களின் ஆதரவும் முழுமையாகக் கிடைக்கும். கட்சியில் உங்கள் மதிப்பு உயரக் காண்பீர்கள். சிறிய செயல் என்றாலும் நன்கு யோசித்து செயல்படுத்துவீர்கள்.
கலைத்துறையினர் சிறப்பாக வளர்ச்சி அடைவார்கள். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உங்கள் கெüரவம் உயரும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.

பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையுடன் நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த ஏதுவான சூழ்நிலை உருவாகும்.

மாணவமணிகள் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் தன்னம்பிக்கை உயரத் தொடங்கும். கலை நிகழ்ச்சிகளில் தனித்தன்மையை வெளிப்படுத்துவீர்கள். உங்களின் நெடுநாளைய கோரிக்கை நிறைவேறும்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.

******

ரிஷபம்

01.01.2022 முதல் 30.06.2022 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் செயல்களில் சுறுசுறுப்பு கூடும். செய்தொழிலில் எதிர்பார்த்ததற்கு மேலாக வருமானம் வரத்தொடங்கும். புதியதாகவும் தொழில் செய்யத் தொடங்குவீர்கள். போட்டிகள், பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். புதிய துறை விஷயங்களிலும் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் திறமைகளை வெளிக்கொணர ஏதுவான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடத் தொடங்கும். குடும்பத்தினர் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.

செய்தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் மறைந்து தனிக்காட்டு ராஜாவாக செயல்படத் தொடங்குவீர்கள். உங்கள் தொழிலை வெளியூர், வெளிநாடுகளுக்கும் விரிவுபடுத்துவீர்கள். ஏற்றுமதி செய்து கணிசமான அந்நிய செலாவணியையும் பெறுவீர்கள். அரசாங்க வழியில் தடைபட்டிருந்த காரியங்கள் சாதகமாக முடிந்துவிடும். பக்குவமாக பேசி அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள் என்றால் மிகையாகாது.

01.07.2022 முதல் 31.12.2022 வரை உள்ள காலகட்டத்தில் மனதிலிருந்த வருத்தங்கள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். மனதை உறுத்தி வந்த பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்; இதனால் விடுதலை பெற்றது போன்ற உணர்ச்சியைப் பெறுவீர்கள்.

குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் தேவையான ஒத்துழைப்பை நல்குவார்கள். பெற்றோருக்கு இருந்த உடல் உபாதைகள் மறைந்துவிடும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் என்று பெரிதாக எதுவும் ஏற்படாது. வீட்டிலும் வெளியிலும் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். பொருளாதாரம் எதிர்பார்த்த அளவுக்கு இருப்பதால் பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு மாறுவார்கள்.

உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வு காண்பார்கள். பதவி உயர்வைப் பெற கடினமாக உழைக்க வேண்டி வரும். மனதிற்குப் பிடித்த இடமாற்றங்கள் கிடைக்கும். மேலதிகாரிகள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு சரியான அறிவுறுத்தல்களை வழங்குவீர்கள். காலம் தவறாமையை தாரக மந்திரமாக ஆக்கிக் கொள்வீர்கள்.

வியாபாரிகள் பொறுமையுடனும் பொறுப்புடனும் வியாபாரம் செய்வார்கள். போட்டியாளர்களின் செயல்களை முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப உங்கள் செயல்பாடுகளை மாற்றி வெற்றி பெறுவீர்கள். கொடுக்கல், வாங்கலில் மேன்மையைக் காண்பீர்கள். விற்பனையாளர்களை பல இடங்களுக்கு அனுப்பி வருமானத்தில் புதிய இலக்குகளை எட்டுவீர்கள். முடிந்த அளவுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

விவசாயிகள் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள். தக்க நேரத்தில் விதைத்து, தக்க காலத்தில் அறுவடை செய்வீர்கள். உபரி வருமானத்தைக் கொண்டு வளமான விதைகளை வாங்குவீர்கள். புதிய நிலங்களை வாங்கலாம் என யோசிக்கத் தொடங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் இயந்திர வாழ்வில் இருந்து விடுபட்டு புதிய முயற்சிகளை செயல்படுத்தத் தொடங்குவார்கள். உங்களை ஒதுக்கி வைத்தவர்கள் தேடிவந்து நட்பு கொள்வார்கள். புதிய பதவிகளையும் கொடுத்து கட்சி மேலிடம் உங்களை கௌரவப்படுத்தும். அனுபவஸ்தர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பீர்கள். சுறுசுறுப்புடன் பணியாற்றும் ஆண்டாக இது அமைகிறது. கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் உதவியால் சில வாய்ப்புகள் கிடைக்கும். .

பெண்மணிகள் இல்லத்தில் மன நிம்மதியைக் காண்பீர்கள். குடும்பத்தினருடன் செலவிட உங்கள் நேரத்தை ஒதுக்குவீர்கள். கணவருடன் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். பெற்றோருக்கும் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். யோகா, பிராணாயாமம் போன்றவற்றைக் கற்றுக்கொள்வீர்கள். பொருளாதார நிலை சீரடையும் ஆண்டாக இது அமைகிறது.

மாணவமணிகளுக்கு ஞாபக சக்தியும் அறிவாற்றலும் பெருகும். கல்வியில் நாட்டமுடன் ஈடுபடுவீர்கள். விளையாட்டுகளிலும் ஈடுபட்டு உடலாரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வீர்கள். சக மாணவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்வீர்கள்.

பரிகாரம்: பைரவரை வழிபட்டு வரவும்.

******

மிதுனம்

01.01.2022 முதல் 30.06.2022 வரை உள்ள காலகட்டத்தில் சமூகத்தில் முக்கியமானவர்கள் தேடிவந்து உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து உங்களை ஆச்சரியப்படுத்துவார்கள். செய்தொழிலில் புதிய தொழில் நுட்பங்களைக் கற்பீர்கள். நெருக்கமானவர்களின் ஆதரவால் உங்கள் காரியங்களைச் சிறப்பாக செய்து முடித்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.

உங்கள் காரியங்களில் விழிப்புடன் இருந்து கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். பயணங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். புத்துணர்ச்சியான சிந்தனைகள் உண்டாகும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். முக்கியமான தருணங்களில் விவேகத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். இல்லத்திற்கு பழைய உறவினர்கள் வந்து சொந்த பந்தங்களை உறுதியாக்குவார்கள்.

01.07.2022 முதல் 31.12.2022 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் புதிய மாற்றங்களைக் காண்பீர்கள். வெளியூரில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். நண்பர்களால் நடத்த முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்ட தொழில்களையும் ஏற்று வெற்றிகரமாக நடத்துவீர்கள். உங்கள் அறிவுத்திறனை அனைவரும் பாராட்டுவார்கள். உங்கள் வேலைகளைப் பலமுறை யோசித்து செயலாற்றி வெற்றி பெற்று விடுவீர்கள்.

ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உங்கள் காரியங்களைப் பொறுப்புடனும் நிதானத்துடனும் செய்து முடிப்பீர்கள். திடீர் வருவாயை காண்பீர்கள். புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தினர், உடன் பிறந்தோரின் தேவைகளை, விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உபரி வருமானத்தால் பழைய கடன்களைத் திருப்பி அடைத்து விடுவீர்கள். நண்பர்களிடம் மனம்விட்டுப் பேசி உங்கள் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். உடலாரோக்கியம், மன வளம் பெருக யோகா, பிராணாயாமம் போன்றவைகளைச் செய்வீர்கள். அதேநேரம் எவருக்கும் முன் ஜாமீன் போட வேண்டாம். உங்கள் பெயரில் பணம் வாங்கிக் கொடுப்பதோ, கடன் கொடுப்பதோ கூடாது.

உத்தியோகஸ்தர்கள் கடினமாக உழைத்தால்தான் நற்பெயர் எடுக்க முடியும். உங்கள் முழு செயல்திறனைக் கூட்டிக்கொண்டு உழைக்கவும். அலுவலகத்தில் பிறருடன் சகஜமாக பழகவும். உங்களை மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. பதவி உயர்வு கிடைக்காவிட்டாலும் ஊதிய உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களுக்கு உதவி செய்து அவர்களின் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ளவும்.

வியாபாரிகள் பழைய கடனைதிருப்பிச் செலுத்தாதவர்களுக்கு புதிய கடன் கொடுக்க வேண்டாம். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைச் செய்யும் காலத்தில் தக்கவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடக்கவும். உங்கள் ரகசியங்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். விவசாயிகளுக்கு மகசூல் லாபம் அதிகரிக்கும்; இருப்பினும் பாசன வசதிகளை மேம்படுத்த வேண்டாம். விவசாயத் தொழிலாளர்களை அரவணைத்துச் செல்லவும். எவரிடமும் வம்பு வழக்குகளை வைத்துக்கொள்ள வேண்டாம். கூட்டு விவசாயத்தில் நல்ல பலன் உண்டாகும். வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன்கள் மானியத்துடன் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். தொந்தரவு கொடுத்து வந்த தொண்டர்கள் அடங்கி விடுவார்கள். வெற்றி இலக்கை நோக்கிப் பயணிப்பீர்கள். கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பி உங்கள் நிலையை அவர்களுக்கு புரிய வைப்பீர்கள்.

கலைத்துறையினர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சவால்களைத் திடமுடன் சமாளிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்களையும் பெறுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் சிறப்பாகவே இருக்கும் ஆண்டாகவே இது அமைகிறது.

பெண்மணிகள் குடும்பத்தினருடன் பாசமாக பழகுவார்கள். முந்தைய காலத்தில் திருடுபோன அல்லது காணாமல் போன பொருள் மறுபடியும் கை வந்து சேரும். மாணவமணிகள் நண்பர்களுடன் உல்லாசமாகப் பொழுதை போக்குவார்கள். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். பெற்றோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு உங்களைத் திருத்திக் கொள்வீர்கள். விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.

பரிகாரம்: சீதா ராமரை வழிபட்டு வரவும்.

******

கடகம்

01.01.2022 முதல் 30.06.2022 வரை உள்ள காலகட்டத்தில் கடினமாக உழைத்து செய்தொழிலை நடத்துவீர்கள். குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்பீர்கள்.

குடும்பத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகைகள் சிறிது தாமதமானாலும் கிடைத்துவிடும். செய்தொழிலை விரிவு படுத்துவதற்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். பெற்றோர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். உடன் பிறந்தோரிடமும் பிரச்னை என்று எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மற்றபடி வெளியூர், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். அதன் மூலம் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். உங்கள் தத்துவ அறிவு பலப்படும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வருமானத்தில் ஒரு பகுதியை தர்ம காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் உண்டாகும். இக்கட்டான சூழல்களில் புதியவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மற்றபடி உங்கள் பேச்சுத் திறமையினால் அனைத்துச் செயல்களிலும் வெற்றி பெற்று விடுவீர்கள்.

01.07.2022 முதல் 31.12.2022 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் போட்டிகள் இருந்தாலும் அவற்றை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். உடலாரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டிவரும். . அதேநேரம் அறிமுகம் இல்லாதவர்களுடன் அதிக நெருக்கம் வேண்டாம். உங்கள் காரியங்களைத் திட்டமிட்டு சரியாக முடிக்க முயல்வீர்கள். ஆலோசனைகளை வழங்குவீர்கள். மற்றவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். மற்றபடி சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, கௌரவம், அந்தஸ்து ஆகியவை உயரத் தொடங்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் அனைத்தும் சிறப்பாக முடியும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்க வாய்ப்பில்லை. கடினமாக உழைத்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். முக்கியமான முடிவுகளை எடுக்கும்பொழுது மற்றவர்களின் நெருக்கடிக்குப் பணிய வேண்டாம். தனிப்பட்ட விஷயங்களை அலுவலகத்தில் பேச வேண்டாம்.

வியாபாரிகள் முக்கியப் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பீர்கள். போட்டியாளர்கள் அடங்கி விடுவார்கள். வியாபாரிகள் மத்தியில் உங்கள் பெயர் புகழ் உயரும். புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள். அதிக முதலீடு செய்யாமல் புதிய வியாபாரத்தையும் தொடங்கலாம்.

விவசாயிகள் கால்நடைகளுக்குச் சிறிது செலவு செய்ய நேரிடும். வருமானம் படிப்படியாக உயரும். புதிய பயிர்களைப் பயிரிடுவீர்கள். உங்கள் வேலைகளைச் சக விவசாயிகளும் பகிர்ந்துகொள்வார்கள். சில காலமாகத் திட்டமிட்டு வந்த வேலைகளைச் செயல்படுத்தும் காலகட்டமாக இது அமைகிறது.

அரசியல்வாதிகள் பலனை எதிர்பார்க்காமல் கட்சி பணிகளைச் செய்வார்கள். தொண்டர்கள் உங்கள் வேலையில் குறுக்கிடுவார்கள்; அதைப் பெரிதுபடுத்தாமல், மனம் தளராமல் பாடுபட்டு நற்பெயரைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டு. கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள்.

கலைத்துறையினர் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். புதிய ஒப்பந்தங்களை ஏற்று, பொறுப்புடன் பணியாற்றி வெற்றி பெறுவீர்கள். பொருளாதாரம் உயர்வடையும். உயர்ந்தவர் ஒருவரின் பார்வையில் படுவீர்கள். அவரால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். பெண்மணிகள் அமைதியாக நடந்து காரியமாற்றுவார்கள். கணவரும் உங்களுடன் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வார். ஆன்மிகத்தில் மனதைச் செலுத்துவீர்கள். குடும்பத்தில் பிரச்னைகள் வராமல் பார்த்துக் கொள்வீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

மாணவமணிகள் தங்கள் பிரச்னைகளுக்குத் தாங்களே தீர்வு காண்பார்கள். நண்பர்களிடம் நெருங்கிப் பழகாமல் ஒதுங்கியே இருப்பார்கள். இதனால் சகஜமான நிலையை உருவாக்கிக் கொள்வார்கள். தேவைக்கேற்ப ஆசிரியர்களும் உதவுவார்கள்.

பரிகாரம்: பார்த்தசாரதி பெருமாளை வழிபட்டு வரவும்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Related posts

குரு பகவானின் தோஷம் நீங்கி நல்லருள் பெற்றிட செய்ய வேண்டியவை!

divya divya

இன்றைய நாள் எப்படி?

Pagetamil

வருமானம் பெருக தினமும் குபேரனை போற்றுங்கள்!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!