காங்கிரஸ் கட்சியின் 137வது ஆண்டு விழாவை ஒட்டி கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றும்போது அது கீழே விழுந்தது. இது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் 137வதுஆண்டு விழா இன்று ( 28) கொண்டாடப்படுகிறது. சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட பெருமை காங்கிரஸுக்கு உண்டு.
இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கட்சி அலுவலகத்தில் இன்று காலை கட்சிக் கொடி ஏற்ற வருகை தந்தார் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி. நிகழ்விடத்தில் வெள்ளை நிற கதர் உடுப்பில், சட்டையில் கட்சிக் கொடி தாங்கி ஏராளமான தொண்டர்கள் கொடி வணக்கம் செலுத்த அணிவகுத்திருந்தனர்.
அப்போது, கட்சிக் கொடி திடீரென கழன்று இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் கரங்களில் விழுந்தது. இதனால் சோனியா காந்தி அதிர்ச்சியில் ஆழ்ந்தார்.
#WATCH | Congress flag falls off while being hoisted by party's interim president Sonia Gandhi on the party's 137th Foundation Day#Delhi pic.twitter.com/A03JkKS5aC
— ANI (@ANI) December 28, 2021
சங்கடமான தருணமாக இருந்தாலும், சோனியா காந்தி, கட்சியின் பொருளாளர் பவன் பன்சால் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் ஆகியோருடன், கட்சி மூவர்ணக் கொடியை சிறிது நேரம் காட்டினார்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு காங்கிரஸ் தொண்டர் பின்னர் கட்சியின் மூவர்ணக் கொடியைக் கட்டுவதற்காக கொடிக்கம்பத்தில் ஏறினார்.
ஆயிரக்கணக்கான தொண்டர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.