நாம் தமிழர் கட்சியினர் நடத்தி வரும் தொடர் போராட்டம் அரசுக்கு எதிரானது அல்ல என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாகையில் நேற்று தெரிவித்துள்ளார்.
மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, நாகை அவுரித்திடலில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்தார்.
பின்னர், சீமான் செய்தியாளர் களிடம் கூறியதாவது: 20 ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம்களையும், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழகத்தின் முதன்மையான நகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறோம். ஒருநாள் போராடிவிட்டு, அமைதியாகிவி டுவார்கள் என அரசு நினைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறோம். இது அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல. என் மக்களுக்கு ஆதரவான போராட்டம். எங்களின் கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால், தொடர் போராட்டங்களை நடத்துவோம். திமுகவினர் எங்களை எதிர்ப்பதை வரவேற்கிறோம்.
குஜராத்தில் ஒரு மீனவரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக்கொன்றபோது, அந்த ராணுவத்தின் மீதே வழக்கு தொடர்ந்தவர் பிரதமர் மோடி. ஆனால், தமிழக மீனவர்கள் 480 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு, நூற்றுக்கணக்கானோர் சிறையில் வாடி வருகின்றனர். பல லட்சம் மதிப்புள்ள வலைகள், படகுகளை பறிகொடுத்திருக்கிறோம். எங்கள் வாக்கு, வளம் ஆகியவற்றை எடுத்துக்கொண்ட மத்திய அரசு, எங்களின் உயிருக்கும், உணர்வுக்கும் மதிப்பளிக்காமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய அழுத்தம் தந்தால்தான் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.