காங்கேசன்துறை பொலிஸ் பிராத்தியத்தில் இராணுவ மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்பட பல இடங்களில் சைவ ஆலயங்களில் திருடப்பட்ட 20 மேற்பட்ட விக்கிரகங்கள் கொழும்பில் மீட்கப்பட்டுள்ளன.
இந்த திருடடு சம்பவத்தில் இராணுவம், கடற்படை புலனாய்வாளர்கள் சிலரும் தொடர்புபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிசம்பர் 9 ஆம் திகதிக்கும் டிசம்பர் 23 ஆம் திகதிக்கும் இடையே தெல்லிப்பழை மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளில் உள்ள சைவ ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடப்பட்டன. காங்கேசன்துறை விகாரைக்கு அருகிலுள்ள பிள்ளையாரும் காணாமல் போயிருந்தார்.
இதன்படி, கொழும்பில் நேற்று முன்தினம் 20 இற்கும் மேற்பட்ட விக்கிரகங்கள் மீட்கப்பட்டன.
பொலிசார் விசாரணையை ஆரம்பித்த போது, காங்கேசன்துறை நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். பழைய இரும்பு வியாபாரி அவர்.
அவரது தொலைபேசியில் திருடப்பட்ட விக்கிரகங்கள் பலவற்றின் ஒளிப்படங்களும் காணப்பட்டன. தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் 2 விக்கிரகங்கள் கைப்பற்றப்பட்டன.
அத்துடன், நவக்கிரி பகுதியை சேர்ந்த 25 வயதான ஒருவரும் கைதானார்.
இந்த நிலையில் கொழும்புக்கு விரைந்த பொலிஸ் குழுவினர் அங்கு வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட மேலும் 20 இற்கு மேற்பட்ட விக்கிரகங்களை மீட்டனர்.
அவற்றை கொள்வனவு செய்த வர்த்தகர்கள் தலைமறைவாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அவற்றில் பல இராணுவ மற்றும் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களின் இந்து ஆலயங்களின் விக்கிரகங்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையோரைக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட விக்கிரகங்கள் யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்படுகின்றன என்று பொலிஸார் கூறினர்.