மாணவர் ஒருவரை தரம் 7 இல் இணைத்துக் கொள்வதற்கு 200,000 ரூபா இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் கைதான கம்பஹா தக்ஷிலா மத்திய கல்லூரியின் அதிபரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய இன்று (24) உத்தரவிட்டுள்ளார்.
கம்பஹா பெம்முல்ல பகுதியைச் சேர்ந்தவரும் கம்பஹா தக்ஷிலா மத்திய கல்லூரியின் அதிபருமான கல்யாணப்பிரிய சமரதுங்க (50) என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த குமாரசிங்க கௌசல்யா இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.
சர்வதேச பாடசாலையொன்றில் ஆங்கில வழியில் கல்வி பயிலும் தனது பிள்ளை, பாடசாலையின் 7ஆம் வகுப்புக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அவரை பாடசாலையில் இணைப்பதென்றால் அதிபர் 200,000 ரூபா இலஞ்சம் கோருவதாக புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
முறைப்பாட்டாளர் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டையடுத்து, இரகசியப் புலனாய்வாளர் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பாடசாலை அதிபர் அலுவலகத்தில் வைத்து இலஞ்சம் பெற்ற போது அதிபர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
சந்தேகநபரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்ததுடன், வழக்கை அன்றைய தினம் வரை நீதிமன்றம் ஒத்திவைத்தது.